Close
நவம்பர் 22, 2024 1:56 காலை

ஆன்லைன் லாட்டரி நிறுவனங்களிடமிருந்து ரூ. 20 ஆயிரம் கோடி கை மாறியுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

ஈரோடு

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஆன்லைன் ரம்மி நிறுவனங்களிடமிருந்து ரூபாய் 20 ஆயிரம் கோடி கை மாறியுள்ளதால்தான் அதை தடை செய்ய திமுக அரசு  உரிய நடவடிக்கை உடனே எடுக்கவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

இடைக்கால பொதுச் செயலாளராக அவர் பதவி ஏற்ற பின் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வருகை தந்த அவருக்கு அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி மேலும் பேசியதாவது:  மக்கள் விரோத மக்களைப் பற்றி சிந்திக்காத தன் குடும்பத்தை பற்றி மட்டும் சிந்திக்கும் ஆட்சி நடக்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் 14 மாதமாகியும் நிறைவேற்றவில்லை. திமுக பல பொய்யான கவர்ச்சியான வாக்குறுதிகள் கொடுத்து கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடித்தது.

மகளிருக்கு மாதம்தோறும் உரிமை தொகை ரூபாய் ஆயிரம், கல்விக் கடன் ரத்து, முதியோர் ஓய்வூதியம் உயர்த்தப்படும், கேஸ் சிலிண்டருக்கு ரூ 500 மானியம் தரப்படும் என்றார்கள், பெட்ரோல் விலையில் ரூ 5 டீசலில் ரூபாய் 4 குறைக்கப்படும் என்றார்கள். பெட்ரோலுக்கு மட்டும் ரூபாய் 3 குறைத்தார்கள் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது 25 மாநிலங்கள் விலையை குறைத்தன.

ஆனால் இங்கு விலையை குறைக்கவில்லை டீசல் விலை குறைந்தால் தான் பொருட்களின் விலை குறையும் ஈரோடு மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் கோரிக்கையை ஏற்று எனது தலைமையிலான அம்மா ஆட்சியில் பெருந்துறைக்கு கொடிவேரி, ஈரோட்டுக்கு ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

விவசாயிகளின் 50 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு அவினாசி திட்டம் ரூபாய் 1652 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டது. அத்திட்டத்தை ஆமை வேகத்தில் நிறைவேற்றுகிறது திமுக அரசு. ஆறு மாதம் முன்பே அது முடிந்திருக்க வேண்டும். அத்திட்டத்தின் மூலம் மூன்று மாவட்டங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் பவானிசாகர் உபரி நீரால் நிரப்பப்பட்டிருக்கும். விவசாயிகள் பயன் அடைந்திருப்பார்கள்.

திட்டம் நிறைவேறாததால் பவானிசாகர் அணையின் உபரி நீர் கடலில் கலக்கிறது. பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனை அரசு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. பெருந்துறைக்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, புதை சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது ஈரோடு நகரம் ரூபாய் 1000 கோடி சீர்மிகு நகர திட்டத்தைப் பெற்றது.

பல சாலைகள் புதுப்பிக்கப்பட்டன. ஏழை எளிய மக்கள் தங்கள் பகுதியிலேயே மருத்துவ வசதி பெற 2000 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டன. இதைப் பொறுத்துக் கொள்ளாத திமுக அரசு, அவைகளை மூடிவிட்டது.

கஞ்சா போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. என்று சட்டமன்றத்திலும் ஊடகம் மூலமாகவும் தெரிவித்தேன். காதில் போட்டுக் கொள்ளவில்லை. இன்று பள்ளி மாணவர்கள் கூட போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாகியுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நாங்கள் சட்டம் இயற்றினோம். ஆனால் அது எதிர்த்த நிறுவனங்களின் வழக்கை சரிவர கையாளாததால் கோர்ட் புதிய சட்டம் இயற்ற அறிவுறுத்தியது. பலர் தற்கொலை செய்து கொண்டனர். சொத்துகளை இழந்துள்ளனர்.

ஆனால் இதுவரை ஆன்லைன் ரம்மி தடை செய்து சட்டம் இயற்ற வில்லை ஏனென்றால் ரூபாய் 20 ஆயிரம் கோடி அந் நிறுவனங்களிடமிருந்து கைமாறி உள்ளது. ரம்மி விளையாட்டு குறித்து மக்களிடம் கருத்து கேட்பதாக கூறுகிறார்கள். சூதாட்டத்தை ஒழிக்க மக்களிடமே கருத்து கேட்கும் ஒரே அரசு இதுதான்.

விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கினோம். விவசாயம் தொழில் சார்ந்து இருந்தால் தான் தான் வேலை வாய்ப்பு பெருகும். ஆனால் இந்த அரசில் 92 ஆயிரம் கிலோ நெல் உன்ன தகுதியற்றது என்று மத்திய குழு கூறியுள்ளது.

இரண்டு லட்சம் முட்டை நெல் மழையால் வழியாக சேதமடைந்தது மக்களின் வரிப்பணம் வீண் ஆகியுள்ளது. அதை அரிசி ஆக்கினால் துர்நாற்றம் ஏற்படும் மக்கள் எப்படி சாப்பிட முடியும். கால்நடைகள்கூட சாப்பிடாது.

எங்கள் அரசு 52 லட்சம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தலாரூபாய் 12 ஆயிரம் மதிப்பில் மடிக்கணினி வழங்கியது அதையும் நிறுத்தி விட்டார்கள் ஆட்சிக்கு வந்ததும் தேர்வு ரத்து என்றார்கள் இன்றுவரை ரத்து செய்யப்படவில்லை.

3.80 லட்சம் மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் 2017-18ல்படித்ததில் 9 பேர் மட்டுமே நீட் தேர்வு பாஸ் செய்தார்கள் .ஆனால் அப்போது மொத்தமுள்ள எம்பிபிஎஸ் இடங்கள் 3145 .மொத்த மாணவர்களில் 41 சதம் அரசு பள்ளியில் பயின்றார்கள்.

எனவே அம்மாவின் அரசு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக் கு மருத்துவ படிப்பில் 7.5 சதம் இட ஒதுக்கீடு செய்தது இதனால் 550 பேர்மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். பலர் ஏழைகள் என்பதால் அனைவரின் மருத்துவக் கல்வி கட்டணம் அரசு ஏற்கும் என்று அறிவித்தோம்.

இதேபோன்று ஆதிதிராவிட மக்களுக்கு ஏராளமான வீடு கட்ட திட்டமிட்டோம் துரதிருஷ்டவசமாக ஆட்சி மாறியது. மக்களுக்கு கிடைக்கவேண்டிய வீடுகள் கிடைக்கவில்லை. அடுத்து அதிமுக ஆட்சி மலரும் அவர்கள் மீது தனி கவனம் செலுத்தப்படும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்வடைய திட்டங்கள்நிறைவேற்றப்படும்.

திமுக அரசினால் முடக்கப்பட்டுள்ள திட்டங்கள்அனைத்தும் புத்துயிர் பெறும் என்றார் எடப்பாடி பழனிசாமி. இதில் முன்னாள் அமைச்சர்கள் கே. ஏ. செங்கோட்டையன்,. கே. சி. கருப்பண்ணன், கே. வி. ராமலிங்கம், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், முன்னாள் எம்எல்ஏ பொன்னுதுரை உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top