ஈரோடு வில்லரசம்பட்டியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக, நசியனூர் அருள்மிகு அப்பத்தாள் திருக்கோயிலுக்கு வருகை தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு சுவாமி தரிசனம் செய்தார். இதில், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ செங்கோட்டையன், கே.சி. கருப்பனன், கே வி இராமலிங்கம், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் ,பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில்,எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் 27.2.2023 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, கட்சியின் அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், எம்எல்ஏ தலைமையில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்று வார்கள். தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் களுக்கு, கட்சி நிர்வாகிகளும், ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றி, கழக வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையம் மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல்களுடன் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பிப்ரவரி 27- ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப் படும் என அறிவித்தது.
வேட்புமனு தாக்கல் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 7 வரை. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8. வேட்பு மனுவை திரும்பப் பெற இறுதி நாள் பிப்ரவரி 10. வாக்குப்பதிவு பிப்ரவரி 27. வாக்கு எண்ணிக்கை மார்ச்-2 நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் 2023 பிப்ரவரி 27 அன்று நடைபெறுகிறது. இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதில் இம்முறையும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. மரணமடைந்த எம்எல்ஏ திருமகன் ஈவேரா முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் ஆவார். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ. வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார் .
அதிமுக யாருக்கு என்பதில் எடப்பாடி பழனிச்சாமி க்கும் பன்னீர் செல்வத்துக்கும் இடையே நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்கு நிலுவையிலிருப்பதால் அதிமுக எடப்பாடி அணியின் சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி. இராமலிங்கம் அல்லது இதே கிழக்கு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். தென்னரசு ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புக்கிடைக்கும் என கூறப்படுகிறது. 2021 தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி இது. 2021 தேர்தலைப் போலவே கூட்டணி இல்லாமல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. 2021 தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த பாமக இத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்று அறிவித்துவிட்டது.