Close
நவம்பர் 22, 2024 5:28 மணி

தொகுதி கண்ணோட்டம்… கிராமங்கள் இல்லாத ஈரோடு கிழக்கு தொகுதி..!

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் கண்ணோட்டம்

காவிரிக்கரையோர தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் ஈரோடு கிழக்கு தொகுதி மிக சிறிய பரப்பளவு, குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி கிராமங்கள் இல்லாத தொகுதியாக உள்ளது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தொடங்கி மாநகராட்சி பகுதிகுள்ளேயே நிறைவடைகிறது. ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் 37 வார்டுகளை ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளடக்கியுள்ளது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதி வரிசையில் 98-வது எண் தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பின்போது ஈரோடு கிழக்கு தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.

கடந்த 5-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் 1,10,713 ஆண் வாக்காளர்களும், 1,16140 பெண் வாக்காளர்களும், 23 இதர வாக்காளர்களும், 22 ராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 2,26, 898 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களின் வசதிக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக பெண் வாக்காளர்கள் உள்ளனர். காவிரிக்கரையோர தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி இருக்கிறது. கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் தொடங்கி ஈரோடு மையப்பகுதி முழுவதும் பெரிய அக்ரஹாரம் வரை ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளடக்கியுள்ளது.

இந்த தொகுதியில் தான் புகழ்பெற்ற ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்), ஈரோடு பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் போன்ற முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பாலும் ஜவுளி சார்ந்த தொழில்கள் அதிக அளவில் உள்ளன. இதேப்போல் ஜவுளி சார்ந்த கிடங்குகள், விசைத்தறிகள் போன்றவற்றில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இதேப்போல் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இந்த தொகுதியில் அதிக அளவில் உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

குறிப்பாக, வளையக்கார வீதி, கிருஷ்ணா தியேட்டர் பகுதி, திருநகர் காலனி, ஈஸ்வரன் கோவில் வீதி, அகில் மேடு வீதி, மஜீத் வீதி, கொங்கலம்மன் கோவில் வீதி பகுதி உள்பட ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் கடந்த 20 வருடத்திற்கும் மேலாக தங்கி பல்வேறு தொழில் செய்து வருகின்றனர்.

இவர்களுக்கும் வாக்குரிமை உள்ளது. வடமாநிலத்தவர்கள் பெரும்பாலும் எலக்ட்ரானிக் கடை, கார்மெண்ட்ஸ் அதிக அளவில் வைத்துள்ளனர். இதேபோல் டீ கடை அதிக அளவில் வைத்துள்ளனர். இவர்களுக்கு இந்த தொகுதியில் கணிசமான வாக்கு உள்ளன.

இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மாரடைப்பால் இறந்ததை அடுத்து தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல்களுடன் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பிப்ரவரி 27- ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வேட்புமனு தாக்கல் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 7 வரை. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8. வேட்பு மனுவை திரும்பப் பெற இறுதி நாள் பிப்ரவரி 10. வாக்குப்பதிவு பிப்ரவரி 27. வாக்கு எண்ணிக்கை மார்ச்-2 -ஆம் தேதி நடைபெறுகிறது

இதில் இம்முறையும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. மரணமடைந்த எம்எல்ஏ திருமகன் ஈவேராவின் தந்தையும்  முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  போட்டியிடுகிறார்.

2021 தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி இது. தற்போது அதன் கூட்டணி கட்சியான அதிமுக போட்டியிடுகிறது. 2021 தேர்தல் போலவே கூட்டணி இல்லாமல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

2021 தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த பாமக இத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்று அறிவித்துவிட்டது.

2021 தேர்தலில் போட்டியிய கட்சிகள்:

திமுக+ (காங்கிரஸ்) – 67,300 வாக்குகள்.  ( 44.27 %)- வெற்றி.

அதிமுக + (தமாக)  –    58,396  வாக்குகள்    (38.41 %)

நாம் தமிழர்                    11,629. வாக்குகள்    (7.65 %)

மக்கள் நீதி மய்யம்+ – 10,005. வாக்குகள்  ( 6.58 %)

அமமுக +                           1,204 . வாக்குகள்   ( 0.79 %).

தலைவர்கள் பிரசாரத்தால் சூடு பிடிக்கும் தேர்தல் களம் :

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி, தேமுதிக வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு இடையே அதிமுகவின் வேட்பாளராக இதே தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ- கே.எஸ். தென்னரசு களமிறங்கி உள்ளார்.இவரை ஆதரித்து  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்களும் எம்எல்ஏ -க்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் 3 நாட்கள் பரப்புரை மேற்கொள்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை ஆதரித்து  பிரசாரம் செய்ய உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், வரும் 27 -ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது தேர்தல் பிரசார களம்  சூடுபிடித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top