ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் ஈரோடு கிழக்கு தொகுதி மிக சிறிய பரப்பளவு, குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி கிராமங்கள் இல்லாத தொகுதியாக உள்ளது.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் தொடங்கி மாநகராட்சி பகுதிகுள்ளேயே நிறைவடைகிறது. ஈரோடு மாநகராட்சி யில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் 37 வார்டுகளை ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளடக்கி யுள்ளது. தேர்தல் பிரசாரம் ஓய்வதற்கு இன்றும் ஐந்து நாள்களே உள்ள நிலையில், பல்வேறு கட்சித்தலைவர் களின் வருகையால் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் பறக்கும்படையினர் மேற்கொண்ட சோதனை யில் உரிய ஆவணனங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட சுமார் ரூ.60- லட்சம் மதிப்பில் பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் ஈவெரா. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த இவர் கடந்த ஜன.4-ஆம் தேதி மாரடைப்பால் காலமானார்.
இதைத் தொடர்ந்து, இத்தொகுதி காலியானதாக சட்டப் பேரவை செயலகம் அறிவித்தது. இதையடுத்து மேகாலயா உள்ளிட்ட 3 மாநில தேர்தல் அறிவிப்புடன், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலையும் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 18-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, பிப்.27-ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது.
இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த மாதம் 18-ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதனைத்தொடர்ந்து ரூ.50 ஆயிரத்திற்க்கு மேல் ரொக்க பணம், ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பரிசுப்பொருட்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு என, 4 நிலை கண்காணிப்பு குழுவினர், 3 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 20-ம் தேதி முதல் நேற்று (சனிக்கிழமை) பிப்.18 வரை, உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரொக்கம் ரூ.51 லட்சத்து 31 ஆயிரத்து 590 பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ. 7 லட்சத்து 36 ஆயிரத்து 670 மதிப்பிலான 1,018.400 லிட்டர் மதுபானம், ரூ.81 ஆயிரத்து 150 மதிப்பிலான 30.6305 கிராம் கஞ்சா, ரூ.52,062 மதிப்பிலான புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுவரை, பணம் மற்றும் பிற பொருட்கள் என ரூ.60 லட்சத்து ஆயிரத்து 472 மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.