Close
செப்டம்பர் 20, 2024 6:44 காலை

மகளிருக்கான உரிமைத்தொகை ரூ. 1000 வழங்கும் திட்டம் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்: முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.

மகளிருக்கான உரிமைத்தொகை ரூ. 1000 வழங்கும் திட்டம் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிபடக்கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து சனிக்கிழமை  நடைபெற்ற  பரப்புரை நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:

திமுக தலைவர் கருணாநிதி குடியிருந்த வீடு ஈரோடு. திமுகவின் அடித்தளம் ஈரோடு. கருணாநிதியின் குருகுலம் ஈரோடு. அப்படிப்பட்ட வரலாற்று சிறப்புக்குரிய ஈரோட்டில், திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல் சொல்லின் செல்வர் ஈவிகே. சம்பத். அவரது மகன் இளங்கோவனுக்கு , கலைஞருடைய மகன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.

இந்த இடைத்தேர்தல் ஏன் வந்தது, எப்படிப்பட்ட சூழலில் வந்தது என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெறச்செய்தீர்கள். அவர் தொகுதி மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் ஏராளம். அப்படிப்பட்ட 46 வயதுடைய இளைஞர் தமிழ்மகன் ஈவெரா அகால மரணமடைந்துவிட்டார். அவரது பணியை தொடரச் செய்ய அவரது தந்தை ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு மாபெரும் வெற்றியைத் தர வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்கள் ஏராளம். அதில் சிலவற்றை உரிய ஆதாரத்துடன் உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன். ஐந்து முறை முதலமைச்சார இருந்த கருணாநிதி, தான்  வெளியிடும் !ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இரண்டு வரிகளை முக்கிய குறிப்பிடுவார். சொன்னதைச் செய்வோம் சொல்லாததையும் செய்வோம்.

தேர்தல் வாக்குறுதிகளில் மகளிருக்கு இலவச பேருந்து பயணத்திட்டத்தை முதல் கையெழுத்து போட்டு நிறைவேற்றினோம். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்புத் திட்டம் இது. பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் இருக்கிறது. ஆனால், காலை வேளைகளில் உணவு உண்ணாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களின் நிலையை நேரில் பார்த்தேன். அதைத் தொடர்ந்து காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத திட்டம் இது.

ஈரோடு
ஈரோட்டில் நடைபெற்ற முதலமைச்சரின் பரப்புரை

1989 -ஆம் ஆண்டில் முதலமைச்சாரகப் பொறுப்பேற்ற கருணாநிதி, எவரும் கோரிக்கை வைக்காமலேயே இலவச மின்சாரத்திட்டத்தை கொண்டு வந்தார். இனிமேல் விவசாயிகள் மின்கட்டணமாக ஒரு பைசாக்கூட கட்டத்தேவையில்லை என அறிவித்தார்.

இடையில் நடந்த அதிமுக ஆட்சியில் அந்தத்திட்டத்தை கெடுப்பதற்காக பல வழிகளில் முயற்சி  செய்தார்கள். அதன் பிறகு தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளில் இதுவரை 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்திட்டத்தில் இணைப்பு வழங்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியந்து பாராட்டக்கூடிய வகையில் நடத்திக்காட்டினோம்.

எதிர்க்கட்சி ஆளுங்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் 234 தொகுதி  மக்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஒவ்வொரு ஆண்டும் தலா 10 கோரிக்கைகள் பெறப்பட்டு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இல்லம் தேடிக்கல்வி, இல்லம்தேடி மருத்துவம்,நான் முதல்வன் திட்டம் மூலம்  மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப் படுகிறது, இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மைக் காக்க 48 திட்டம், ஓலிம்பிக் தங்கப்பதக்கம் தேடுதல், பெரியார் சமத்துவபுரம், உழவர் சந்தை, பத்திரிகையாளர் நல வாரியம், தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம், மாவட்டம் தோறும் புத்தகக்கண்காட்சி, 20 கலை அறிவியல் கல்லூரிகள், அரசு ஐடிஐ -கள் மேம்பாடு. காவல் ஆணையம், கல்லூரி கனவு, சிற்பி திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை நாங்கள் நடைமுறைப்படுத்தி யுள்ளோம்.நீட் தேர்வு விலக்கு சட்டம், என்னுடைய காலத்திலேயே நீட் தேர்வு விலக்கு பெறுவதே லட்சியம்.

ஈரோடு
ஈரோட்டில் முதலமைச்சர் பரப்புரையில் பங்கேற்ற மக்கள்

திமுக ஆட்சிக்கு வந்து எதையும் செய்யவில்லை என எதிர்க்கட்சித்தலைவர்  எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார். நான் தற்போது கூறியவற்றை படித்துப்பார்க்க வேண்டும். அதற்கு அவர் தனது கண்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் நான் பேசியதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் 85 சதவீத  வாக்குறுதிகளை  நிறைவேற்றி முடித்து விட்டோம்.  5 ஆண்டுகளுக்குள்  நிறைவேற்றுவதற்காக வாக்குறுதிகள் அளிக்கப்படுகிறது. அதில் முக்கியமான  வாக்குறுதியாக இருப்பது,  பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய  ரூ. 1000 உரிமைத் தொகை திட்டம்.  கடந்த ஆட்சியாளர்கள்  கஜானாவை காலிசெய்யாமல் போயிருந்தால், கடன்சுமையை ஏற்றி வைக்காமல் இருந்திருந்தால்  நாங்கள் ஆட்சிக்கு  வந்தவுடன் அதையும் செய்திருப்போம்.

வரும் மார்ச் மாதம் சட்டப்பேரவையில் தாக்கலாகும் நிதி நிலை அறிக்கையில்  மகளிர் உரிமைத்தொகை  வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை   அறிவிப்போம் .  இது இடைத்தேர்தல் அல்ல எடைத் தேர்தல். நாங்கள் நல்ல ஆட்சி நடத்துகிறோமா  இல்லையா என்பதை மக்கள் எடை போட்டு பார்க்கும் தேர்தல். மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.

இங்கு நடந்த தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி பேசியபோது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். என கூறிச்சென்றுள்ளார். ஆனால், நான் கேட்கிறேன்  60, 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் இளங்கோவனை  ஈரோடு மக்கள் வெற்றி பெறச்செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top