புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சிறப்பு சுருக்க திருத்த முறையின்போது, வாக்குசாவடி மையங்கள் மறுசீரமைத்தல் குறித்து, அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடனான விளக்கக் கூட்டம் (25.08.2023) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வரைவு வாக்குசாவடி பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, வெளியிட்டார்.
கடந்த 05.01.2023 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி (Final Electoral RolI) புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,62,655 ஆண் வாக்காளர்கள், 6,79,306 பெண் வாக்காளர்கள் மற்றும் 66 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 13,42,027 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1559 வாக்குச்சாவடி மையங்கள் (Polling Stations) உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 941 வாக்குச்சாவடி அமைவிடங்கள் (Polling Station Locations) உள்ளன. இதில் நகர எல்லைக்குள் (Urban) 85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்லைக்குள் (Rural) 856 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2024 ஆண்டிற்கான சிறப்பு சுருக்க திருத்த முறையில், (Special Summery Revision 2024) புதுக்கோட்டை/அறந்தாங்கி/ இலுப்பூர் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் 178-கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி, 179-விராலிமலை சட்டமன்ற தொகுதி, 180- புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, 181-திருமயம் சட்டமன்ற தொகுதி, 182- ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மற்றும் 183-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கூட்டம் (Recognized Political Parties) 22.08.2023 மற்றும் 23.08.2023 அன்று நடத்தப்பட்டது.
வாக்குச்சாவடி மையங்களில் (Polling Stations) நகரம் மற்றும் கிராம எல்லைகளில் 1500 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் வாக்குச்சாவடி மையங்களை பிரித்தல் வேண்டும். இந்நேர்வில் புதுக்கோட்டை மாவட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் ஏதுமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் குடியிருப்பு பகுதியிலிருந்து 2 கிலோ மீட்டருக்குள் வாக்குச்சாவடி மையங்கள் (Polling Stations) அமைத்தல் வேண்டும். இந்நேர்வில் புதுக்கோட்டை மாவட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் 2 கிலோ மீட்டருக்கு அப்பால் வாக்குச்சாவடி மையங்கள் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி மையங்கள் (Polling Stations) தார்சு கட்டிடத்தில் தரை தளத்தில் அமைத்திட வேண்டும். அந்த கிராமத்தில் தார்சு கட்டிடம் இல்லாத நிலையில் ஓட்டுக் கட்டிடத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கலாம். வாக்குச்சாவடி மையங்கள் (Polling Stations) அரசு கட்டிடத்தில் அமைத்திட வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு (Rationalization of Polling Stations) தொடர்பாக கட்டிடம் மாற்றம் 77, இடம் மாற்றம் 5 (Change of Building/ Locations) மொத்தம் 82-ம், வாக்குச்சாவடி பிரிவு மாற்றம் (Change of Sections) 2-ம், வாக்குச்சாவடி பெயர் மாற்றம் (Change of Nomenclature) 39-ம் ஆக மொத்தம் 123 மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், வாக்காளர் பதிவு அலுவலர்கள்/வருவாய் கோட்டாட்சியர்கள் குழந்தைசாமி (இலுப்பூர்), ப.ஜஸ்டின் ஜெபராஜ் (அறந்தாங்கி), தனி வட்டாட்சியர் (தேர்தல்) .அ.சோனை கருப்பையா மற்றும்ரெத்தினம் (தி.மு.க.), சேட் (அ.இ.அ.தி.மு.க.), ஏ.எம்.எஸ்.இப்ராஹிம் பாபு (இந்திய தேசிய காங்கிரஸ்), அப்துல் ஜாபர் (ஆம் ஆத்மி கட்சி), எஸ்.வெங்கட்ராமன் (பாரதிய ஜனதா கட்சி), திரு.எஸ்.சங்கர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்)), திரு.சேதுராமன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.