Close
அக்டோபர் 5, 2024 7:14 மணி

புதுக்கோட்டை மாவட்டத்துக்காரரா நீங்கள்…! ஒரு நிமிடம் இதப்படிங்க..

புதுக்கோட்டை

புதுக்கோட்டை எம்பி தொகுதி மீண்டும் கிடைக்குமா

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் அனைவரும் அவசியம் இதைப் படித்துவிட்டு மற்றவர்கள் பார்வைக்கும்  அனுப்பி வைத்து  புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியை மீட்க ஒன்றிணைய வேண்டியது அனைவரது கடமை.

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகளும்,39 பாராளுமன்றத் தொகுதிகளும் உள்ளன.1 பாராளுமன்றத் தொகுதி என்பது 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக் கியது. புதுக்கோட்டை மாவட்டம்  6  சட்டப்பேரவைத் தொகுதி களை கொண்டிருக்கிறது.

புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதி இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து அதாவது 1951 முதல் 2008 வரை இருந்தது.2008  -இல் தொகுதி மறுசீரமைப்பில் சில அரசியல்வாதிகளின்  சுயலாபத்திற்காக புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியை  4 துண்டாக்கிவிட்டனர்.  6 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தும் புதுக்கோட்டை என்று தனி பாராளு மன்றத் தொகுதி இல்லை.

இதன் விளைவாக கடந்த 2009 முதல் ஜனவரி-2024 தற்போது வரை மத்திய அரசால் மற்றும் 4 பாராளுமன்ற உறுப்பினர்க ளால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் செய்ய முடியவில்லை.

புதுக்கோட்டை மாவட்டம் பின் தங்கியேதான் இருக்கிறது. உதாரணமாக 2 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பெரம்ப லூருக்கு ஒரு பாரளுமன்றதொகுதி

மூன்று சட்டமன்றத் தொகுதி கொண்ட நீலகிரி, மயிலாடுதுறை,நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு பாராளு மன்ற தொகுதி. 4 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சிவகங்கை,  இராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களுக்கும் தனித்தனியே பாராளுமன்ற தொகுதி இருக்கிறது.

மாவட்ட தலைநகராகக் கூட இல்லாத ஆரணி, சிதம்பரம், பொள்ளாச்சிக்குக் கூட தனியாக ஒரு பாராளுமன்ற தொகுதி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் 6 சட்டமன்ற தொகுதி இருந்தும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டும் தான் தனியாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இல்லை.

இதன் விளைவாக மக்களுக்கு பயன்படும் வகையில் எந்த வளர்ச்சித் திட்டமும் வரவில்லை. புதுக்கோட்டை மாவட்ட மக்கள் கடும் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின் றனர்.

நமது 100 ஆண்டு கனவுத் திட்டமான தஞ்சாவூர்-துக்கோட்டை புதிய ரயில் பாதையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி கூட புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று வரை தொடங்கப்பட வில்லை. வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கிறது. ஆனால், மற்ற மாவட்டங்களில் எல்லாம் 2 அல்லது 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்கிவிட்டனர்.இது ஒட்டு மொத்தமாக புதுக்கோட்டை மாவட்டத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

உதாரணமாக அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந் தோர் இராமநாதபுரம் பாரளுமன்ற உறுப்பினரைப் பார்க்க வேண்டும் என்றால் 108 கிமீ சென்று பார்க்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளபட்டிருக்கின்றனர்.

அதேபோல விராலிமலை தொகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினரைப் பார்க்க 100 கி மீ க்கு மேல் கடந்து கரூர் செல்ல வேண்டியுள்ளது. இப்படி புதுக்கோட்டை என்று தனி பாராளு மன்றத் தொகுதி இல்லாததால் திருச்சி, சிவகங்கை, கரூர், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர்களை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.

அவர்களும் அவர்கள் மாவட்டத்திற்குதான் முன்னுரிமை தந்து நிதி ஒதுக்கி பணி செய்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத் திற்கு சொல்லும் அளவுக்கு எதுவும் செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்டம் இன்று வரை தொடர்ந்துபுறக்கணிக் கப்பட்டு வருகிறது.

ஆதலால் தான் புதுக்கோட்டைக்கு வர வேண்டிய எய்ம்ஸ் மருத்துவமனையும் புதுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் இல்லாத காரணத்தால் வேறு பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.  மத்திய உயர்கல்வி நிறுவனங்களாக சென்னையில் பல கல்வி நிறுவனங்களும், காரைக்குடியில் சிக்ரி, திருவாரூரில்  மத்திய பல்கலைக்கழகம், திருச்சியில் IIM, NIT, IIIT, சட்ட பள்ளி, தஞ்சையில் NIFPT இருக்கிறது.

புதுக்கோட்டையில் இன்று வரை எந்தவொரு மத்திய அரசு நிறுவனங்களும் ,தொழிற்சாலைகளும் இல்லை. தற்போது கூட விருதுநகருக்கு மத்திய அரசு சார்பில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுகிறது.  இளைஞர்களின் வேலை வாய்ப்புக் கென எந்த அடிப்படைக் கட்டமைப்புகளும் கடந்த 50 ஆண்டு களாகவே இல்லை. புதுக்கோட்டை மாவட்டம் அடுத்த கட்ட வளர்ச்சி வேண்டும் என்றால் புதுக்கோட்டைக்கு என தனி பாராளுமன்ற உறுப்பினர் தேவை..

நமது காலத்தில் இருந்ததை இழந்து விட்டு நிற்கிறோம்.வெகு விரைவில் புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியை மீட்டெடுக்க புதுக்கோட்டை மாவட்ட மக்கள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். இழந்த புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியை மீட்டெடுக்கும் முயற்சியில் நம் அனைவரின் பங்கும் இன்றியமையாதது.

நாம் இப்போது புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியை மீட்கப் போராடினால் நமக்கு விரைவில் புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதி கண்டிப்பாக கிடைக்கும் என்பதை தொகுதியிலுள்ள ஒவ்வொருவரின் நம்பிக்கையாக உள்ளது. சாத்தியமாகுமா என்பது அரசியல்வாதிகள் கைகளில்தான் உள்ளது. பொறுத்திருந்து  பார்க்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top