புதுக்கோட்டை நகராட்சிக்கு 27 -ஆவது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அப்பு (எ) கனகசபை வீடு வீடாகச்சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த வார்டில் ஆண், பெண் உள்பட மொத்தம் 3,100 வாக்காளர்கள் உள்ளனர்.
அதிமுக வர்த்தகர் அணி நிர்வாகியாக உள்ள இவர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்எல்ஏ வுமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் நல்லாசியுடன் முதல் முறையாக தற்போது களம் காண்கிறார். இவர் 27-ம் வார்டில் 80 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்ற பாரம்பரியமிக்க ஸ்ரீபைரவர் ரைஸ்மில் குடும்பத்தின் வாரிசு ஆவார்.
தனது வார்டுக்குள்பட்ட கீழ 2, 3 வீதிகள், சக்கரவர்த்தி அய்யங்கார் சந்து, ராணிஸ்கூல் சந்து, பெருமாள்கோவில் வீதி, நெல்லுமண்டித் தெரு, தெற்கு 2, 3, 4 வீதிகள் மற்றும் வெள்ளையப்ப ராவுத்தர் சந்து உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிகழ்வில் அதிமுக மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் சென்று வாக்குகள் சேகரித்தனர்.
வெற்றி பெற்றவுடன் தான் செய்யவுள்ள பணிகள் குறித்து வேட்பாளர் அப்பு (எ) கனகசபை கூறியதாவது: அனைத்து வீடுகளுக்கும் காவிரி குடிநீர் வசதி செய்து தரப்படும். வார்டுக்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும் திருட்டையும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தைத் தவிர்க்க (CCTV ) கண்காணிப்பு காமெரா பொருத்தப்படும். ஆதரவற்ற முதியவர்களுக்கு அரசு நிதி உதவி பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும். அனைத்து தெருக்களிலும் மின்விளக்கு அமைத்து தரப்படும். முக்கிய இடங்களில் மின்கோபுரம் அமைத்து தரப்படும்.வார்டு மக்கள் சுலபமாக என்னை அணுகும் வகையில் அலுவலகம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.