அதிமுகவுக்கும் போடும் ஒவ்வொரு வாக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு போடுவதற்கு சமமானது என வாக்காளர்களிடம் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வலியுறுத்தினார்.
புதுக்கோட்டை நகராட்சியில் 34 -ஆவது வார்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெ.ராஜாமுகமது-வுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரசாரத்தில் அமைச்சர் மெய்யநாதன் மேலும் பேசியதாவது: முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற 8 மாதங்களில் 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்.
அதில், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி போன்ற ஏராளமான திட்டங்களை வரிசைப்படுத்தலாம். தமிழக முதல்வர் ஆட்சி நடத்தும் திறமையைக்கண்டு நாடே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. அதில், இளம் தலைவர், வருங்காலப் பிரதமர் ராகுல்காந்தி நான் தமிழன் என்று கூறி தமிழகத்தையும் தமிழர்களையும் பெருமைப்படுத்தியுள்ளார்.
பெரியார், அண்ணா, கருணாநிதி, காமராஜர் பிறந்த மண்ணில் மதவாத சக்திகளுக்கு எப்போதும் இடமில்லை என்பதை இந்தத் தேர்தலில் தமிழக மக்கள் நிரூபிப்பார்கள். தமிழகத்தில் பாதுகாக்கப்படும் சமூக நீதி நாடு முழுவதும் கொண்டு சேர்க்க முதல்வர் ஸ்டாலின் தேசிய அளவில் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளார். தேர்தல் முடிந்தும் அப்பணிகள் விரைவுபடுத்தப்படும்.
அதிமுகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் பாஜவுக்கு விழக்கூடிய வாக்குகள்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. மதத்தையும் மத நம்பிக்கைகளையும் தகர்க்கும் கூட்டம் பள்ளிகளில் உடை அணிவதிலும் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறது. அதில் மக்கள் கவனமுடன் செயல்பட்டு மதவாத சக்திகளை புறக்கணித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார் மெய்யநாதன்.
இதில், மாவட்ட திமுக பொறுப்பளர் கே.கே.செல்லப்பாண்டியன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி. முருகேசன், மாநில காங்கிரஸ் முன்னாள் செயலர் வழக்கறிஞர் ஏ. சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.