மணப்பாறை நகராட்சி 26-ஆவது வார்டு வேட்பாளர் மணவை தமிழ்மாணிக்கம் தயாரித்த தேர்தல் அறிக்கையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி வெளியிட்டு பிரசாரம் செய்தார்.
வேட்பாளர்மணவைதமிழ்மாணிக்கம் வார்டு மக்களிடம் அளித்துள்ள வாக்குறுதிகள்:
1. நகர்மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றால் நம் பகுதியின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை, சாக்கடை வசதி ஆகியவற்றை குறைவின்றி தீர்த்து வைப்பேன்.
2. முழுநேர பொதுவாழ்வில் இருப்பதால் எந்நேரமும் தங்களின் பிரச்னைகளுக்காக எளிதில் அணுகலாம்.
3. ராஜீவ்நகர் பகுதியில் உள்ள அப்பு அய்யர் குளத்தை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி நடைமேடையுடன் கூடிய அழகிய பூங்கா அமைக்கப்படும்.
4.அந்தக்குளத்தின் வரத்து வாய்க்கால்கள் முறைப்படுத்தப்பட்டு, எவருக்கும் இடையூறு இல்லாமல் வடிகால் குழாய்களும் அமைக்கப்படும்.
5. இதன்மூலம் பெருமழை வந்தாலும், குளத்தில் இருந்து வெளியேறும் நீர் குடியிருப்புப் பகுதிகளில் தேங்காமல் செய்ய முடியும்.
6. 26 ஆவது வார்டில் பொது நூலகம் அமைக்கப்படும்.
7. கிராம சபை கூட்டம் நடப்பதைப் போல, நமது வார்டு பகுதியில் ஆண்டுக்கு இருமுறை நகரமக்கள் சபை கூட்டம் நடத்தப்படும்.
8. வார்டு பகுதி மேம்பாட்டுக்காக நகர்மன்ற உறுப்பினருக்கு உதவியாக அலுவல் சாரா அமைப்புக் குழு உருவாக்கப்படும்.
9. வார்டு பகுதி மக்களின் சுக துக்கங்களில் சக நண்பனாக பங்கேற்பேன்.
10. மணப்பாறை நகராட்சியின் 27 வார்டுகளில் ஆகச்சிறந்த முதல்நிலை வார்டுப் பகுதியாக ராஜீவ்நகரை மாற்றுவேன்.
11. வார்டு உறுப்பினராக மட்டும் இல்லாமல், ஒட்டு மொத்த மணப்பாறை நகரின் பொதுமக்கள் கோரிக்கைகளுக்காக குரல் எழுப்புவேன்.
12. பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் உடனுக்குடன் கிடைக்க வகை செய்வேன்.
13. புதிய காவிரிக் குடிநீர் குழாய் இணைப்பு கிடைப்பதற்கும், முறையாக குடிநீர் விநியோகம் செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்வேன்.
14. மணப்பாறையில் அரசு, கலை அறிவியல் கல்லூரி அமைப்பதற்கு போராடி வருகிறேன். வரும் கல்வியாண்டில் அக்கல்லூரி அமைந்திட தமிழக அரசிடம் வாதாடி பெற்றுத் தருவேன்.
15. ராஜீவ்நகர் பகுதியில் ஏற்கெனவே ஒவ்வொரு தெருவிற்கும் 1 முதல் 15 குறுக்குச்சாலைகளாக வரைபடம் தயாரித்து, எனது பொறுப்பில் விளம்பரம் செய்தேன். அதை நகராட்சி நிதியிலிருந்து விளம்பர ஸ்டீல் போர்டுகளாக அமைப்பேன்.
16. என்னுடைய முயற்சியில் பொதுமக்கள் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் கஜா புயலால் சேதமுற்றது. அதை அரசு நிதி உதவியுடன் நவீன சிசிடிவி அமைப்பாக மாற்ற முயல்வேன்.
17. நமது வார்டு பகுதி மக்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை பொது மருத்துவ முகாம் நடத்தப்படும்.
18. நமது வார்டு பகுதியில் முக்கிய இடங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் பெட்டி வைத்து மனுக்கள் பெறப்படும்.
19. ஆளும் திமுக கூட்டணியில் தொடர்வதாலும், மாவட்ட அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்புச் சகோதரர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரி செ.ஜோதிமணி ஆகியோரின் நன்மதிப்பை பெற்றுள்ளதாலும், பல்வேறு அரசுத் திட்டங்களை வார்டுக்குக் கொண்டு வருவேன்.
20. மேலும், தலைவர் வைகோ அவர்களின் நாடாளுமன்ற பொது உறுப்பினர் நிதியில் இருந்தும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வேன்.
21. மணப்பாறையில் சுற்றுச் சாலை அமைவதற்கும், காவிரி பகிர்மானக் குழாய் மாற்றுவதற்கும், புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தவும் முயல்வேன்.
22. நம் பகுதி மக்களுடன் இணைந்து தமிழர் திருநாளாம் பொங்கல் விழா, கிறிஸ்துமஸ் விழா, ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவேன்.
23. வருடா வருடம் 25 ஆவது வார்டு ஈத்கா திடலில் நடைபெறும் ரமலான், பக்ரீத் தொழுகைக்கு வரும் முகமதிய சகோதரர்களை 26-ஆவது வார்டு அனைத்து மக்களின் சார்பில் வரவேற்று, வாழ்த்தி சமூக நல்லிணக்கத்தை மலரச் செய்வேன்.
24. அதேபோல, ராஜீவ்நகர், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் திருவிழா, பாத்திமாமலை மாதா தேவாலய நிகழ்வுகளுக்கு 26-ஆவது வார்டு மக்களின் சார்பில் கொடை வழங்கப்படும்.
25. எவ்வித சான்றிதழுக்காகவும் நகராட்சி அலுவலகத்திற்கு வீணாக பொதுமக்களை அலைக்கழிப்பு செய்வதை மாற்றுவேன்.
26. நமது பகுதி மக்களின் உரிமைக்காக எவ்வித சமரசமும் இன்றி துணிச்சலாக எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலுடன், கடமையாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன் என வேட்பாளர் மணவைதமிழ்மாணிக்கம் தெரிவித்துள்ளார்.