விஸ்வகர்மா உறவுகளில் உள்ள ஐந்து தொழில் அமைப்புக ளுக்கும் தனித்தனியாக நல வாரியம் அமைக்க வேண்டுமென அகில பாரத விஸ்வகர்மா உறவுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டையில் அகில பாரத விஸ்வகர்மா உறவுகள் பங்கேற்ற புதுக்கோட்டை மாவட்ட கலந்தாய்வு கூட்டம் இன்று (11.9.2022) நடைபெற்றது. இதில் அகில பாரத விஸ்வகர்மா உறவுகள் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ஆறுமுகராஜ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:
விஸ்வகர்மா உறவுகளில் ஐந்து தொழில் அமைப்புகள் உள்ளது. இந்த ஐந்து தொழிலுக்கும் தனித்தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, எங்களுக்கு தேவையான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இந்த சாதி வாரி கணக்கெடுப்பு எங்களது நீண்ட நாள் கோரிக்கையாகவே இருந்து வருகிறது. இதனால் பின் தங்கியுள்ள எங்களுக்கு வேலை வாய்ப்பிலும், அரசியல் பிரதி நிதித்துவம் கிடைக்கும். இதுவரை அரசு எங்களுக்கு எந்தவித முன்னுரிமையும் அளிக்கவில்லை.
மேலும் எங்களுடைய கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்க அரசியல் பிரதிநிதிகள் யாரும் இல்லை. எங்களது கோரிக்கைகள் பலமுறை அரசுக்கு எடுத்துரைக்கப் பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணப்படவில்லையெனில், பல கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
மேலும் எங்களது சமுதாயத்தை ஒன்றிணைத்து புதிய அரசியல் கட்சியை தொடங்க வழிவகை செய்யப்படும். செப்டம்பர் 17 -ஆம் தேதி விஸ்வகர்மா ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதை மத்திய மாநில அரசுகள், பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்றார்.