புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் இருந்து புலியூர் கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தித்தர வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த தென்னந்திரை யன்பட்டி, ஆலங்குடிப்பட்டி, ரெகுநாதபுரம், பாலாண்டார் களம், உறவிக்காடு, கலரிப்பட்டி, மதியானத்தெரு உள்ளிட்ட சிற்றூர்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கீரனூருக்கு வரவேண்டி உள்ளது. இவர்களுக்கு போருமான பேருந்து வசதி இல்லாததால் மேற்படி மாணவர் கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மேற்படி பகுதிகளை உள்ளடக்கி கீரனூரில் இருந்து புலியூருக்கு பேருந்து வசதி கேட்டு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ச்சியான அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த 2.3.2020 அன்று குளத்தூர் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் மேற்படி கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தருவதாக ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை பேருந்து வசதி செய்து தரப்படவில்லையாம்.
இதனைத் தொடர்ந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கடந்த 14.10.2022 அன்று சாலை மறியல் மாவட்டம் நடத்துவது என அறிவித்து துண்டுப்பிரசும் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 13.10.2022 அன்று குளத்தூர் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்தையில் 20 தினங்களுக்குள் பேருந்து வசதி ஏற்படுத்தித் தருவதாக அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். ஆனால், இந்த அறிவிப்பையும் அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர்.
இந்நிலையில், மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி கீரனூரில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை மீண்டும் போராடட்ம் நடத்துவதற்குத் தயாராகினர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக்கழக வணிக மேலாளர் எம்.சுப்பு, குளத்தூர் துணை வட்டாட்சியர் மணி, காவல் ஆய்வாளர் சாமுவேல்ஞானம் உள்ளிட்டோர் பேச்சுவார்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் மாதர் சங்க மாவட்டச் செயலளார் பி.சுசீலா, பொருளாளர் ஜெ.வைகைராணி, குன்றாண்டார் கோவில் ஒன்றியத் தலைவர் எம்.மகாலெட்சுமி, சிபிஎம் ஒன்றியச் செயலளார் எஸ்.கலைச்செல்வன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் பழனிவேல்.
விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் அடுத்த 10 தினங்களுக்குள் கண்டிப்பாக மேற்படி வழியில் அரசுப் பேருந்து இயக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.