கிராமப்புற திருப்பணி நிதிக்கு ஒன்றிய (மத்திய) அரசு ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்வதை ரத்துசெய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கத் தின் மாநிலத்தலைவர் பி. வாசு பூசாரி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் வசிக்கும் பகுதிகளில் உள்ள திருக்கோவில் திருப்பணிக்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் வழங்கும் ரூ. 2 லட்சம் திருப்பணி நிதிக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்வதை ரத்து செய்ய தமிழக நிதி அமைச்சர் மூலம் தாங்கள் ஆவன செய்ய வேண்டும்.
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள திருக்கோவில் களுக்கு தமிழக அரசு 2 லட்சம் திருப்பணி நிதி வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இத்தகைய நிதி சுமார் 2500 திருக்கோவில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் கட்டுமானப் பொருள்கள் கடும் விலை உயர்வு காரணமாக இத்தொகை போதுமானதாக இல்லை.
இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசின் ஜிஎஸ்டி 18% வரி சென்ட்டேஜ் 2% தொழிலாளர் நலநிதி 1% உள்பட மொத்தம் 21% அதாவது ரூ. 2 லட்சம் திருப்பணி நிதியில் சுமார் ரூ.40,000 பிடித்தம் செய்யப்பட்டு விடுகிறது.
இதனால் திருக்கோவில் திருப்பணிகளை முழுமையாக செய்து முடிக்காமல் அரைகுறையாக முடிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் பக்தர்களும் பொதுமக்களும் திருக்கோவில் திருப்பணியைச் செய்து முடிக்க இயலாமல் தவித்து வருகின்றனர்.
மத்திய அரசு பிடித்தம் செய்யும் 18% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய ஆவன செய்யுமாறு பலமுறை சேலத்தை தலைமை இடமாக கொண்ட கோவில் பூசாரிகள் நலச்சங்கம் முறையிட்டும் பலன் இல்லை.
ஒன்றிய(மத்திய) அரசு இந்துக்களின் நலன்நாடும் அரசு என்று பறைசாற்றிக் கொள்கிறது. ஆனால் இந்துக்களின் திருக்கோவில் திருப்பணிக்கு தமிழக அரசு வழங்கும் 2 லட்சம் நிதிக்கு ஒன்றிய அரசு 18 சதவீத ஜிஎஸ்டி வரியைப் பிடித்துக் கொள்கிறது. இந்துக்களின் பாதுகாவலன் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஒன்றிய அரசு திருக்கோவில் திருப்பணிக்கு ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்வது மாபெரும் முரண்பாடு.இதை கைவிட வேண்டும்
தமிழகத்தில் திராவிட மாடல் ஆன்மீக அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத் துறையும் திருக்கோவில்களும் புதுப் பொலிவு பெற்று உத்வேகத்துடன் செயல்பட்டு வருகின்றன. கிராமப்புறத் திருக்கோவில்களுக்கு ஒரு கால பூஜை நடைபெற வங்கி வைப்பு நிதி மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட திருகுலத்தார் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள திருக்கோவில்களுக்குத் திருப்பணி நிதி போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள திருக்கோவில்களுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ. 2 லட்சம் திருப்பணி நிதிக்கு ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்வதை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டுமென ஒன்றிய(மத்திய) அரசு ஏற்பாடு செய்யும் மாநில நிதி அமைச்சர்கள் ஜிஎஸ்டி ஆய்வுக் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் வலியுறுத்துமாறு தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டுமென அதில் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கை மனுவில் நகல்கள், தமிழக நிதி அமைச்சர்,தமிழக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மின்னஞ்சல் மூலம்), இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் கூடுதல் செயலாளர் / இந்து சமயம், சுற்றுலா அறநிலையங்கள் செயலர், முதன்மை செயலாளர்/ ஆணையர் இந்து சமய அறநிலையத்துறை, அனைத்து மண்டல இணை ஆணையர்கள் உதவி ஆணையர்கள் இந்து சமய அறநிலையத்துறை ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.