Close
செப்டம்பர் 20, 2024 3:55 காலை

சத்தியமங்கலத்தில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

ஈரோடு

கோபி ஆர்டிஓ பிரியதர்ஷினியிடம் கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் சிப்காட் தொழில் பேட்டை  அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் கோபி  வருவாய் கோட்டாட்சியர்  அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே 1080 ஏக்கரில் சிப்காட் அமைப்பதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு பல்வேறு விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சிப்காட் அமைக்க கூடாது என பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கோபி ஆர்டிஓ அலுவலகத்தில் திரண்டு , சிப்காட் அமைக்க கூடாது என முழக்கமிட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது.

அதை தொடர்ந்து கோபி ஆர்டிஓ பிரியதர்ஷினியிடம் விவசாயிகள் அமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அப்பொழுது ஆர்டிஓ பிரியதர்ஷினியிடம் ஏற்கெனவே பெருந்துறை சிப்காட்டால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காளிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவு நீரால் நிலத்தடி நீர் மட்டம் பாதித்ததோடு, ஒன்றை மீட்டரி அளவுக்கு மண் அதன் தன்மையை இழந்துவிட்டது என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாங்கள் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. அதே நேரத்தில் தண்ணீர் மாசு ஏற்பட கூடாது என்பதற்காக எதிர்க்கிறோம். எனவே சக்தியில் சிப்காட் அமைக்க கூடாது. இப்பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று   வேண்டுகோள் விடுத்தனர்.

இது தொடர்பாக ஆர்டிஓ விடம் வழங்கப்பட்ட மனுவில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள சுங்ககாரன்பாளையம் கிராமத்தில் 80 ஏக்கர் நிலமும், பனையம்பள்ளி கிராமத்தில் 304 ஏக்கர் நிலமும், குரும்பபாளையம் கிராமத்தில் 694 ஏக்கர் நிலமும் ஆக மொத்தம் சுமார் 1080 ஏக்கர் கிணற்றுப் பாசன வேளாண் நிலத்தினை அப்பகுதி விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக தமிழக அரசு எடுத்து சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக சென்னை தலைமை நிலம் கையகப்படுத்துதல் அலுவலகத்தில் இருந்து வான்வெளி கருவி(IGRS)மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, அதனை சரிபார்க்க சென்னையில் இருந்து சிறப்பு வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு செய்து முடித்துள்ளார். நூற்றுக்கணக்கான விவசாய குடும்பங்களின் காலகாலமான குடியிருப்பு மற்றும் வேளாண் நிலங்கள் பறிக்கப்பட்டு, அரசு வழிகாட்டு மதிப்பீட்டில் நிலத்திற்கான குறைந்த அளவு பணம் கொடுக்கப்பட்டு, பூர்வீக வாழ் நிலத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட உள்ளனர்

மேலும், பவானி ஆறு என்பது தமிழகத்தின் ஒரே வற்றாத ஜீவநதி. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வாழும் சுமார் ஒன்றரை கோடி மக்களின் குடிநீர், வேளாண்மை,தொழிற்சாலை மற்றும் வன உயிரினங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் மூன்று இலட்சம் ஏக்கர் நேரடி ஆயக்கட்டு பாசனமாகவும், சுமார் 2 லட்சம் ஏக்கர் மறைமுக பாசனமாகவும் உள்ளது.

தொழிற்சாலைகள் உமிழும் மாசடைந்த புகையினால் சுமார் 100 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு காற்று மண்டலம் விஷமாக்கபடவும், சுத்திகரிப்பின்றி வெளியேற்றப்படும் மாசடைந்த கழிவுநீர் நேரடியாக பவானி ஆற்றில் கலக்கப்படுவதற்குமே இதுவழிவகுக்கும். எனவே இப்பகுதியில் தொழிற்பேட்டை அமைக்ககூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top