Close
செப்டம்பர் 20, 2024 1:38 காலை

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே சாலை மறியல் போராட்டம்

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட நாட்டாணி புரசக்குடி ஊராட்சியில் உள்ள கோபாலபட்டினம் கிராமத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இந்த கிராமத்தில் சரியான சாலை வசதி இல்லை என்றும் போதிய குடிநீர் வசதி இல்லை என்றும் எங்கு பார்த்தாலும் குப்பை கிடங்காக கிராமம் மாறி உள்ளதாகவும் அதை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் அக்கிராம ஜமாத்தார்களும் ஒன்றிணைந்து கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஜமாத்தை சேர்ந்த முகமது அலி ஜின்னா கூறுகையில், எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் தான் எங்கள் ஊராட்சியிலேயே ஊராட்சி தலைவராகவும் , துணைத் தலைவராகவும், ஒன்றிய குழு உறுப்பினராகவும் உள்ளனர். இவர்களுக்குள் நடக்கும், கோஷ்டி பூசல்  காரணமாக  ஊராட்சி சம்பந்தமாக எந்த ஒரு வேலையையும் அவர்கள் பார்க்கவில்லை என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொறுப்பாளர் நாகராஜன் கூறுகையில், இந்த பகுதிக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்னால் நாங்கள் வந்து பார்த்தபோது இது கிராமமே இல்லை குப்பை கூடாரமாக இருந்தது.

இது குறித்து அனைத்து அதிகாரிகளிடம் பேசியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து ஜமாத்தார்கள் உடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

அதன் பிறகு இங்கு வந்த ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் வில்லியம்ஸ் மோசஸ் மற்றும் காவல் துறையினர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி குப்பைகளை உடனடியாக அகற்றி விடுகின்றோம் என்றும். வரும் 30 நாட்களுக்குள் சாலைகளை சரி செய்து, கொடுக்கிறோம் என்று வாக்குறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல்  கைவிடப்பட்டது.நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மத்திய மாநில அரசை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால்  நாகப்பட்டினம் ராமேஸ்வரம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top