புதுக்கோட்டையில் கடந்த 20 ஆண்டுகளாக உழவர் சந்தை இயங்கி வருகிறது. காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் இடைத்தரகர்களிடம் தங்களத காய்கறிகளை குறைந்த விலைக்கு கொடுக்காமல் நேரடியாக விற்பனை செய்வதற்காக தான உழவர் சந்தை உருவாக்கப்பட்டது.
அதன்படி இங்கு வியாபாரம் செய்யும் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் நிலத்தை பட்டாவை வேளாண் விற்பனை குழு அதிகாரிகளிடம் முறையாக சமர்பித்து அதன் பின்னர் அரசால் அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு தான் உழவர் சந்தைக்குள் விவசாயிகள் வியாபாரம் செய்ய முடியும். புதுக்கோட்டை உழவர் சந்தையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசிடம் இருந்து அடையாள அட்டை பெற்றுக்கொண்டு 20 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர்.
வெளிக்கடைகளால் உழவர் சந்தை விவசாயிகளின் விற்பனை பாதிக்கப்படுவதாக புகார் : சமீபகாலமாக உழவர் சந்தைக்கு வெளியே பல வியாபாரிகள் அடையாள அட்டை இல்லாமல் தற்காலிக கடை போட்டு காய்கறி வியாபாரம் செய்து வருவதால் தங்களுக்கு விற்பனை பாதிக்கப் படுவதாகவும் இதைத்தடுத்து உழவர் சந்தையை இயங்கச்செய்ய வேண்டுமென வலியுறுத்தி திங்கள்கிழமை வியாபாரத்தை நிறுத்தி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட உழவர் சந்தை விவசாயிகள் கூறியதாவது,
நாங்கள் 2000 -ஆம் ஆண்டிலிருந்து தோட்டக்கலையின் மூலமாக விவசாய உழவர் சந்தை அடையாள அட்டை பெற்று எங்களின் விவசாயப் பொருட்களை உழவர் சந்தையில் விற்பனை செய்து வருகிறோம். மேலும், உழவர் சந்தை இரண்டு வாயில்களையும் வெளி ஆட்கள் கடைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர்.
200 மீட்டர் தொலைவுக்குள் காய்கறி கடைகள் இருக்கக்கூடாது என்ற விதிமுறை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. விவசாயிகள் அல்லாத நபர்களுக்கு உழவர் சந்தையில் இடம் ஒதுக்கீடு செய்யக்கூடாது.இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கைள் எடுக்கவில்லை.
தற்பொழுது புதிதாக குழுக்கடைகள் என்ற பெயரில் உழவர் சந்தைக்கு வெளிப்புறத்தில் நகராட்சி நிர்வாகத்தால் வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகளில் காய்கறி விற்பனை செய்வதால் எங்களது விவசாய பொருட்களை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் உழவர்சந்தை வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
மேலும், உழவர் சந்தையில் கழிவறை பல மாதங்களாக சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. உழவர் சந்தைக்குள் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். என உழவர் சந்தை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.