ஈரோடு-சத்தியமங்கலம் 4 வழி சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் விவசாயம், கல்வி, தொழில் வளர்ச்சி அடைந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. இதுதவிர தமிழகம்-கர்நாடகா மாநில எல்லையில் அமைந்துள்ளதால், ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், சித்தோடு, கோபி, சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதுதவிர மற்ற மாவட்டங்களில் இருந்து மைசூர் செல்லும் வாகனங்களும், இதே வழியாக தான் செல்ல வேண்டி உள்ளதால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால், சித்தோடு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கோபி, சத்தியமங்கலம் வழியாக மேட்டுப்பாளையம் வரையில் 120 கி.மீ. தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்யப்பட்டது. இந்த சாலை, கிராமப்புற பகுதியில் இணைப்பு சாலையுடன் 120 அடி அகலமும், பேரூராட்சி பகுதியில் 110 அடி அகலமும், நகராட்சி பகுதியில் 100 அடி அகலமும் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.
இதையடுத்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திட்டமிடப்பட்டு தற்போது ஈரோடு கவுந்தப்பாடி ஈரோடு-சத்தியமங்கலம் வரை 4 வழிசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஈரோடு முதல் சித்தோடு வரை ஓரளவு பணிகள் முடிவடைந்து உள்ளது. சித்தோட்டில் இருந்து கோபி வரை பணிகள் நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே ரோடுகள் போட்டும், பல இடங்களில் ஜல்லிக்கற்கள் மட்டும் போட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது.
இதனால் இந்த வழியாக செல்லும் இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பஸ்கள், லாரிகள் என அனைத்து தரப்பினருக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. வாகனங்கள் செல்லும்போது கிளம்பும் புழுதி அனைவரது கண்களையும் சுவாசத்தையும் பாதிப்பதுடன் வாகனத்தை ஓட்டிச்செல்வதில் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு செல்லும் சாலையில் செல்லக்கூடிய பேருந்துகள் அடிக்கடி பழுதாகி விடுவதால், அலுவலகம், பள்ளிக்கூடம், கல்லூரி செல்பவர்கள், பல்வேறு அலுவல் காரணமாக வெளியே செல்பவர்கள் என அனைவரும் மிகுந்த அவதிப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. இது போன்ற இடர்பாடுகளை மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் செல்பவர்களும் தினமும் சந்திக்கும் நிலை தொடர்கிறது.
ஈரோடு முதல் சத்தியமங்கலம் வரை 4 வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும் இந்த பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.