Close
செப்டம்பர் 20, 2024 4:12 காலை

பணிநிரந்தரம் செய்யக்கோரி மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் 240 பேர் கைது

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் (சிஐடியு) சங்கம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற  மறியல் போராட்டம்

பல ஆண்டுகாலம் பணிசெய்த ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  புதுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் (சிஐடியு) சங்கம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  240 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் அறிவித்தபடி அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் தினக்கூலி ரூ.380 வழங்க வேண்டும். கே 2 மற்றும் சிட் ஒப்பந்தப்படி பல ஆண்டுகள் பணிசெய்த ஒப்பந்தப் பணியாளர்களை அடையாளம் கண்டு பணி நியமனம் வழங்கி, பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் இல்லை என்ற பொய்யான அறிக்கை அனுப்புவதைக் கைவிட்டு பணிச்சான்றிதழ் வழங்க வேண்டும்.

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் வியாழக்கிழமையன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு புதுக்கோட்டை கிளை திட்டத் தலைவர் எஸ்.சித்தையன் தலைமை வகித்தார்.

கோரிக்கைகளை விளக்கி செயலாளர் கே.நடராஜன், பொருளாளர் ஆர்.ஆறுமுகம் ஆகியோர் பேசினர். போராட்டத்தை ஆதரித்து சிஐடியு மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, துணைச் செயலாளர் கே.ரெத்தினவேல் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் பங்கேற்ற 240 பேரை போலீசார் கைது செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top