மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாணை 52- ன்படி நாளொன்றக்கு 4 மணி நேரத்தில் வருடத்திற்கு100 நாட்கள் வேலை வழங்கக் கோரி அன்னவாசல், மணமேல்குடி ஆகியஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச்சங்கத்தின் சார்பில் அன்னவாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் எம்.சி.லோகநாதன் தலைமை வகித்தார்.
மணமேல்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.தங்கவேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் எஸ்.சேகர், எம்.மரியசெல்வம், லெட்சுமணன், திருநாவுக்கரசு, ராதிகா உள்ளிட்ட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
அரசாணை 52-ன்படி நாளொன்றுக்கு 4 மணி நேரத்தில் வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். அரசு நிர்ணயிக்கும் முழுக்கூலியையும் வழங்க வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நீலவண்ண சிறப்பு அட்டை வழங்க வேண்டும். தகுதியான மாற்றுத் திறனாளிகளை பணித்தளப் பொறுப்பாளராக நியமிக்க வேண்டும். பணியிடத்தில் மாற்றுத்திறனாளிகளை அவமரியாதை செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தின்போது எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அந்தந்த வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள்... நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த 1993ஆம் ஆண்டில் ஊனமுற்றோருக்கான தனி இயக்ககம் சமூக நல இயக்ககத்திலிருந்து பிரித்து ஏற்படுடுத்தப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதன் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான விரிவான மாநிலக் கொள்கையை இவ்வரசு வெளியிட்டது.
இத்துறை, மாற்று திறனாளிகள் (சமவாய்ப்புகள், உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம், 1995-ன் படி ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் அலுவலகமாக 1999 ஆம் ஆண்டு நிலை உயர்த்தப்பட்டு, இந்திய ஆட்சிப் பணி நிலையிலுள்ள உயர் அலுவலர் ஊனமுற்றோருக்கான மாநில ஆணையாக நியமிக்கப்பட்டார்.
மாற்றுத் திறனாளிகளுக்குள்ள தனிப்பட்ட திறமைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களை உடல் ஊனமுற்றோர், குருடர், செவிடர் என்று அழைப்பதைத் தவிர்த்து அவர்கள் மீது சமுதாயம் கொண்டுள்ள கண்ணோட்டத்தை மாற்றுவதற்கென இனி அவர்களை மாற்றுத் திறனாளிகள் என அழைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசால் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கென தலைமைச் செயலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை என தனியாக ஒரு நிர்வாகத் துறை துவக்கப்பட்டது.
மாற்றுத் திறனாளிகள் சமுதாயத்தில் ஒரு அங்கமாக அனைவரும் ஏற்கவும், சமுதாய வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்பதற்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கும், அவர்களின் முழுபங்கேற்பை உறுதி செய்வதற்கும் உரிய விழிப்புணர்வை இவ்வரசு ஏற்படுத்தி வருகிறது.
சமுதாயத்தில் ஒவ்வொரு நடவடிக்கையிலும் சமமாக ஈடுபடுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு முழுவதுமாக உதவும் வகையில் தமிழக அரசு அவர்களுக்கென பல கொள்கைகளை வகுத்தும், திட்டங்களைத் தீட்டியும், அமல்படுத்தி வருகிறது. ஏனைய மக்களுக்கு இணையாக மாற்றுத் திறனாளிகள் வாழவேண்டும் என்பதை உறுதி செய்யவென அரசால் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.