கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 6,000-க்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்றனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய முறையை அமுல்படுத்த வேண்டும். காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும். அவுட்சோர்சிங் முறையில் ஆள் எடுக்கும் நடைமுறையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்…
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 6 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்றனர். இதனால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வேலை நிறுத்தத்தை முன்னிட்டு அனைத்து வட்டாரத் தலைநகரங்களிலும் அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆ.வள்ளியப்பன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, வருவாய்த்துறை ஊழியர் சங்க நிர்வாகி வைரமணி, சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் மலர்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கறம்பக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் விகேஏ.மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல இதர வட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.