சத்துணவு ஊழியர்கள் தங்களுக்கான வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.15 லட்சம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவுத் திட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஜெயலலிதா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டப் பொருளாளர் க.பிச்சைமுத்து, அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கருப்பையா, சத்துணவு ஊழியர் சங்க ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.