திருவொற்றியூர் ரயில் நிலையம் வழியாகச் செல்லும் விரைவு ரயில்களை திருவொற்றியூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவொற்றியூர் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, திருவொற்றியூர் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்கத்தின் தலைவர் என். துரைராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் கௌரவ தலைவர் ஜி. வரதராஜன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி கட்டடத்தில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரிக்கு நிரந்தர கட்டடத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.
திருவொற்றியூரில் வட்டாட்சியர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலகம், தொழிலாளர் நலத்துறை வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்தும் தற்போது பல்வேறு இடங்களில் வாடகை கட்டடங்களிலும், திருமண மண்டபங்களிலும் இயங்கி வருகின்றன.
மேலும் இவ்வலுவலகங்களில் போதிய வசதிகள் ஏதும் ஏற்படுத்தப்பட்ட வில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே இப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்து அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் நிரந்தர கட்டடங்களை அமைத்து ஒருங்கிணைந்த வளாகம் ஒன்றை அரசு அமைத்திட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை: வடசென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில் பயணிகள் முனையம் அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. ராயபுரம் அல்லது தண்டையார்பேட்டை யில் மூன்றாவது ரயில் முனையத்தை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாம்பரம், மாம்பலம், திருவள்ளூர் பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் எல்லாம் விரைவு விரைவுகள் நின்று செல்கின்றன
ஆனால் வடசென்னை மக்களின் நலனை கருத்தில் கொண்டு திருவொற்றியூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை சுமார் 25 ஆண்டுகளாக இப்பகுதி எழுப்பப்பட்டு வருகிறது.
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக திருவொற்றியூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கேற்ற வகையில் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகளை அமைத்திட ரயில்வே அமைச்சகம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் குரு சுப்பிரமணி, எம்.மதியழகன், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.