Close
செப்டம்பர் 20, 2024 3:35 காலை

புதுக்கோட்டை நகராட்சி துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்கள்

ஊதியம் வழங்காததைக் கண்டித்து புதுக்கோட்டை நகராட்சி துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை நகராட்சியில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த தொழிலாளர்களால மொத்தம் 223 பேர் பணியாற்றி வருகின்றனர். அதில், புதுக்கோட்டை பேருந்து நிலையப் பகுதியில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கென  47 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

இத்தொழிலாளர்களுக்கு மாதம் தோறும்   5, 6 தேதிகளில் ஊதியம் வழங்கப்படும் நிலையில், இந்த மாத ஊதியம் இது நாள் வரை ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில்,  நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து  துப்புரவு பணியாளர்கள் புதுக்கோட்டை பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் செவ்வாய்க்கிழமை  காலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிஐடியு உள்ளாட்சி சங்க மாவட்டத்தலைவர் கே. முகமதலி ஜின்னா, மாவட்டச்செயலர் ஸ்ரீதர், துணைத்தலைவர் அன்பு மணவாளன்,  துணைச்செயலர்கள் ரத்தினம், சரவணன், யாசின், சிஐடியு நகர ஒருங்கிணைப்பாளர் முத்தையா உள்ளிட்டோர் அங்கு சென்று போராட்டம் நடத்திய தொழிலா ளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தகவறிந்து அங்கு வந்த  நகராட்சி பொறியாளர் ஓரிரு நாள்கள் பொறுத்திருக்க வேண்டும் என கூறினார். ஆனால் இதை ஏற்க மறுத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடர்கின்றனர்.

இப்பிரச்னையை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லும்  வகையில்  பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்வதென தீர்மானித்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top