Close
செப்டம்பர் 20, 2024 4:09 காலை

புதுக்கோட்டையில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மலையப்பன் நகர் பகுதியில் குடிநீர் வேண்டி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

புதுக்கோட்டை நகராட்சி 22 -ஆவது வார்டுக்கு உள்பட்ட மலையப்பன் நகரில் கடந்த 15 நாள்களாக குடிநீர் தட்டுப்பாடு நீடித்து வருவதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று (மே 19) காலை புதுக்கோட்டை- திருமயம் தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி அலுவலர்கள் பேச்சு நடத்தி உடனடியாக லாரியில் குடிநீரை கொண்டு வந்து அப்பகுதி மக்களுக்கு விநியோகம் செய்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

குடிநீர்த்தட்டுப்பாடு காரணமாக சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் வட்டாரத்தில் கிடைத்த தகவல்:
புதுக்கோட்டை நகர் மக்களுக்குத் தேவையான குடிநீர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரி்யத்தால் காவிரிக்கூட்டுக் குடிநீர்த்திட்டம் மூலம் திருச்சி அருகே ஜீயபுரத்தி்ல் இருந்து வினியோகிக்கப்படும் குடிநீரைக் கொள்முதல் செய்து நகராட்சி நிர்வாகம் வினியோகித்து வருகிறது.

இந்நிலையில் பருவமழை குறைவு மற்றும் வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்   அங்கிருந்து தினமும் கிடைக்க வேண்டிய 1.2 கோடி லிட்டர் நீருக்குப் பதிலாக 70 லட்சம் லிட்டர் அளவில் மட்டுமே கிடைத்து வருகிறது. இதை வைத்து புதுகை நகரின் குடிநீர்த்தேவையை  நகராட்சி நிர்வாகம் சமாளித்து வருகிறது. கூடிய விரைவில்  நகர மக்களின் குடிநீர்த்தேவையை முழு அளவில் பூர்த்தி செய்யக்கூடிய நல்ல சூழல் உருவாகி வருகிறது.

எனவே, குடிநீர் வினியோகம் நடைபெறாத பகுதி மக்களின் குடி நீர்த்தேவையை நிறைவேற்றும் வகையில் லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர்பற்றாக்குறை குறித்து நகராட்சி நி்ர்வாகத்துக்கு உரிய தகவல் அளிப்பதை விட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதைக் கைவிட வேண்டும். எனவே, குடிநீர் வினியோகம் நடைபெறாத பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top