Close
ஏப்ரல் 5, 2025 12:17 மணி

ரூ 2 ஆயிரம் பணத்தாள்களை மாற்ற அடுத்த ஆண்டு ஜனவரி வரை அவகாசம் : விக்கிரமராஜா கோரிக்கை

சென்னை

விக்கிரமராஜா

ஒன்றிய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ 2 ஆயிரம்  பணத்தாள்களை மாற்றுவதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் அவகாசம் அளிக்க வேண்டும் என தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:

ரூ 2 ஆயிரம் பணத்தாள்களை செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் 8 நாட்களும், அடுத்து வரும் 4 மாதங்களிலும் மட்டுமே கால அவகாசம் என்பது கண்டிப்பாக போதுமானதாக இருக்காது.

பொதுமக்களிடம் இருந்து வியாபாரிகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து வந்தாலும் வணிக ரீதியாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வியாபாரிகளிடம் அதிக அளவில் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

எனவே செப்டம்பர் 30 -ஆம்தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் ரூ 2 ஆயிரம் பணத்தாள்களை மாற்றிக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்.

ரூ 500, 1000 பணத்தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து வாங்கிய பணத்துக்கு வருமான வரித்துறையினரிடம் விளக்கம் அளிக்க வேண்டிய நிலையும் வியாபாரிகள் பலருக்கு ஏற்பட்டது. இதனால் கடுமையான பாதிப்புகளையும் வியாபாரிகள் சந்திக்க நேரிட்டது. இதன்காரணமாகவே பொதுமக்கள் வங்கியில் சென்று தங்களிடம் உள்ள ரூ  2 ஆயிரம்  பணத்தாள்களை மாற்றிக்கொள்ளுமாறு கூறி வருகிறோம் என்றார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top