Close
நவம்பர் 22, 2024 12:42 காலை

புதுகை அருகே சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழை நீரால் மக்கள் அவதி

புதுக்கோட்டை

வடசேரிப்பட்டி கிராமமக்கள் அவதி

புதுக்கோட்டை அருகே வடசேரிப்பட்டி கிராமத்திற்கு செல்லும் ரயில்வே சுரங்க பாதையில் மழைபெய்து மூன்று நாட்கள் ஆகியும் மழைநீர் வடியாததால் சுரங்க பாதைவழியாக கிராமத்துக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி. புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, வெள்ளனூர் பஞ்சாயத்து உட்பட்ட வடசேரி பட்டி கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த வடசேரி பட்டி கிராமத்தில் இருந்து பொதுமக்கள் நகர் பகுதி மற்றும் மருத்துவமனை வெளியூர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்த ரயில்வே சுரங்கப்பாதை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே நிர்வாகம் மூலம் ரயில்வே அகலப்பாதை அமைக்கும் போது சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்ட நாளிலிருந்து மழை பெய்தால் சுரங்கப்பாதை முழுவதும் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் அப்படி மழை நீர் தேங்கி இருக்கும் பொழுது ரயில்வே நிர்வாகம் நீர் இறைக்கும் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வந்தனர்.

ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக நீர் இறைக்கும் மோட்டார் பழுதாகி உள்ளதால் மழை பெய்து சுரங்கப் பாதைக்குள் மழை நீர் வடியாமல் மூன்று நாட்களாக தேங்கியிருப்பதால் அவ்வழியாக வடசேரி பட்டி பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

இருப்பினும் தேங்கி கிடக்கும் மழைநீரில் இருசக்கர வாகனத்தில் கடந்து செல்லும் பொழுது இரண்டு சக்கர வாகனங்கள் இன்ஜினுக்குள் மழை நீர் புகுந்து இருசக்கர வாகனம் பழுதாகி விடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். சில நேரங்களில் சுரங்கப்பாதையில் கடந்து செல்லும் பொழுது தடுமாறி கீழே விழும் சூழலும் உள்ளதாகவும் அக்கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகத்திலும் பலமுறை எடுத்துக் கூறியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து இதுபோன்று சுரங்கப் பாதைக்குள் மழை நீர் புகுந்து மழை நீர் வடியாமல் இருப்பதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் எனவே மழை நீரை அப்புறப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டுமென வடசேரி பட்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோன்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துறையூர் கிராமத்தில் மழை பெய்து கொண்டிருந்த பொழுது சுரங்கப்பாதையில் மழைநீர் சூழ்ந்ததால் இதை அறியாமல் சுரங்கப்பாதையில் மருத்துவப் பெண் காரில் சிக்கிக் கொண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top