ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை பார்த்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் புதன்கிழமை காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த தெண்ணதிராயான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(44). ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் அருகில் டோங்கு கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு தினக்கூலியாக வேலை செய்துவந்தார். இந்நிலையில், பழனிச்சாமிக்கு விபத்து ஏற்பட்டு ஆபத்தான நிலையில் ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக உறவினர்களுக்கு கடந்த 29.05.2023 அன்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் கடந்த 01.06.2023 அன்று திருச்சிராப்பள்ளிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்ட பழனிச்சாமி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து வாய்பேச முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்த பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி கடந்த 17.06.2023 அன்று இறந்து விட்டார். வாய் பேசமுடியாததால் அவரிடம் எந்த வாக்குமூலமும் வாங்கப்படவில்லை.
இதனால் அங்கு என்ன நடந்தது என்பதில் உறவினர்களுக்கு வலுவான சந்தேகம் உள்ளது. பழனிச்சாமி இறந்து ஐந்து நாட்களாகியும் பிரேத பரிசோதனை நடத்தவில்லை. இதற்கு போலீசாரின் முதல் தகவல் அறிக்கை இல்லாததே காரணம் எனக்கூறப்படுகிறது. இங்குள்ள போலீஸார் ராஜஸ்தான் காவல் நிலையத்தையும், அங்குள்ளவர் தமிழ்நாடு காவல்துறையையும் காரணம் காட்டி இழுத்தடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இறப்பு குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உடனடியாக உடற்கூராய்வு செய்யப்பட வேண்டும். இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இறந்த பழனிச்சாமியின் குடும்பத்திற்கு நீதியும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டுமென வலியுறுத்தி கீரனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதன்கிழமை காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் கலந்துகொண்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.கலைச்செல்வன் (குன்றாண்டார்கோவில்), என்.மகாலிங்கம் (விராலிமலை) பேசினர். ஊராட்சி மன்றத் தலைவர் முத்துராமன், எஸ்.பெருமாள், கே.எம்.சங்கர், ஏ.பழனிச்சாமி, ஏ.ஆர்.கண்ணப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.