Close
செப்டம்பர் 19, 2024 11:26 மணி

எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

எண்ணூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்

எண்ணூர் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதியைச் சேர்ந்த எட்டு மீனவ கிராம மக்கள் சார்பில் எண்ணூரில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டம் குறித்து மீனவர்கள் கூறியதாவது:  எண்ணூர் பகுதியில் தாளங்குப்பம், பெரியகுப்பம், சின்ன குப்பம், காட்டுக்குப்பம் முகத்துவாரக் குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.
இப்பகுதியில் அமைந்துள்ள வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் சுடுநீர் மற்றும் நிலக்கரி சாம்பல்களால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய மீன்பிடித் தொழில் முற்றிலுமாக அழிந்து வருகிறது . மீன்வளமும் படிப்படியாக குறைந்து விட்டது.
இதுகுறித்து பலமுறை வடசென்னை அனல் மின் நிலைய நிர்வாகத்திற்கு தொடர்ந்து எங்களது கோரிக்கைகளையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வந்தோம். இந்த நிலையில் வடசென்னை அனல் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை விநியோகத்திற்கு எடுத்துச் செல்வதற்காக கொசஸ்தலை ஆற்றில் ராட்சத மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.
இதனால் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் நீரோட்டம் கடுமையாக பாதிக்கப்படும். ஏற்கெனவே மீன்பிடித் தொழில் நலிவடைந்த நிலையில் இந்தத் திட்டம் மேலும் எங்களை பாதிப்பிற்கு உள்ளாக்கும். எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும்.
அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் சுடுநீர் சுத்திகரிப்புக்கு முன்னதாகவே கடலில் விடுவது தடுக்கப்பட வேண்டும். நிலக்கரி சாம்பலை வெளியேற்றுவதில் சுற்றுச் சூழல் விதிமுறைகளை முற்றிலுமாக கடைப்பிடிக்க வேண்டும்.
இப்பகுதி மீனவ சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு அனல் மின் நிலையத்தில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.
மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தையடுத்து செங்குன்றம் துணை ஆணையர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top