Close
நவம்பர் 22, 2024 6:35 காலை

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி கிராம சுகாதார செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு

ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம சுகாதார செவிலியர்கள்

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி
விஎச்என்கள் 24 மணி நேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவும், அதற்கான சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும்  தாலுகா அலுவலகங்கள் முன்பு 24 மணி நேரம் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெ.உஷாராணி தலைமையில் ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் (விஎச்என்) பங்கேற்றனர்.
போராட்டத்தை தமிழ்நாடு வருவாய்துரை கிராம உதவியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.ராஜசேகர் தொடக்கி வைத்து உரையாற்றினார்.நிதி காப்பாளர் கவிதாமணி வரவேற்றார்.மாநிலத் தலைவர் பி.செந்தாமலர் போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.

போராட்டம் குறித்து மாநிலத் தலைவர் செந்தாமலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உஷாராணி ஆகியோர் தமிழ்மணி இணையதள செய்தியாளரிடம் கூறியது:

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க மறுக்கும் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். கடந்த 2019  -ல் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தின்போது எங்களை ஆதரித்து பேசிய தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை அளித்தார்.

இதனை உறுதிபடுத்தும் வகையில் 2021 -ல் சட்டப்பேரவை தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் 309 -ஆவது வாக்குறுதியிலும் சிபிஎஸ் திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

திமுக ஆட்சிக்கு வந்தால் எங்களது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கும் எனக்கருதி பெரும்பாலான அரசு ஊழியர்கள் திமுகவுக்கு வாக்களித்தனர். ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகளாகியும் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

எனவே, சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து ஓய்வு பெற்ற, இறந்த மற்றும் ஓய்வு பெறும் அரசு ஊழியர்க ளுக்கு ஓய்வூதிய பணிக்கொடை வழங்கக்கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு தாலுகா அலுவலகங்கள் முன்பு கிராம சுகாதார செவிலியர்கள் 24 மணி நேர காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் சுமார் 8,000 கிராம சுகாதார செவிலியர்கள் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திலும் முடிவு கிடைக்கா விட்டால் வரும் செப். 12 -ஆம் தேதி சென்னையில் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர்.
#செய்தி- மு.ப.நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top