அரசுப் போக்குவரத்துப் பணிமனையின் டயர் மறு உற்பத்தி நிலையம் மூடப்படாது என கந்தர்வகோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரையிடம் அதிகாரிகள் உறுதி அளித்ததால் இந்தப்பிரச்னை முடிவுக்கு வந்தது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் நிறுவனத்தின் கீழ் 6 மண்டலங்களும், 60 பணிமனைகளும் செயல்படுகின்றன. இவற்றில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகளின் டயர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக புதுக்கோட்டை, திருச்சி தீரன்நகர், கும்பகோணம், தேவகோட்டை ஆகிய 4 இடங்களில் உருளிப்பட்டைப் பிரிவு என்ற டயர்கள் உற்பத்தி மற்றும் மறு உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில், புதுக்கோட்டையிலுள்ள இந்த நிலையத்தை மூடிவிட்டு, புதுக்கோட்டை மண்டலத்துக்குத் தேவையான டயர்களை திருச்சியிலுள்ள தீரன்நகர் நிலையத்தில் இருந்து பெற்றுக் கொள்ள போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இதனைக் கண்டித்து அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆக. 31-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்றும், இப்போராட்டத்தில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளர் இளங்கோவன் எம்.சின்னத்துரை எம்எல்ஏவை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது கிளை மேலாளர்கள் மதியழகன் (ஆலங்குடி), தாமோதரன் (கந்தர்வகோட்டை), சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியம், போகுவரத்து சங்க மத்திய சங்கப் பொருளாளர் தரணி முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பேச்சுவார்த்தையில், புதுக்கோட்டையில் இயங்கி வரும் டயர் மறு உற்பத்தி நிலையம் மூடப்படாது என எம்எல்ஏ சின்னத்துரையிடம் பொது மேலாளர் இளங்கோவன் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து நாளை (ஆக.31) நடைபெற இருந்த முற்றுகைப் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக சிஐடியு நிர்வாகிகள் தெரிவித்தனர்.