புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே கறம்பக்குடி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தோப்புத் தெரு பேருந்து நிறுத்தம் முன்பு குளத்தூர் நாயக்கர்பட்டி தோப்புத் தெரு பொதுமக்கள் 100 -க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே குளத்தூர் நாயக்கர்பட்டி, தோப்புத்தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லாமல் குண்டும் குழியுமான மண் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த குண்டு குழியுமான மண் சாலையால் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது தடுக்கி விழுந்து விபத்துகள் ஏற்பட்டு உள்ளதாகவும் மழைக் காலங்களில் குண்டும் குழியுமான மண் சாலையில் மழைநீர் நிரம்பி செல்வதற்கு வழியில்லாமல் கழுத்து வருவதாகவும் இது சம்பந்தமாக பலமுறை போராட்டங்கள் நடத்தியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால், ஆத்திரம் அடைந்த தோப்புத் தெரு கிராம பொது மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு சென்று சாலை வசதி செய்து தரக்கோரி கறம்பக்குடி தஞ்சை தேசிய நெடுஞ் சாலை தோப்பு தெரு பேருந்து நிறுத்தம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது காலை வேலை என்பதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் தவிக்க நேரிட்டது.