Close
செப்டம்பர் 19, 2024 11:19 மணி

மத்திய அரசைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ கட்சியினர் 65 பேர் கைது

புதுக்கோட்டை

புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ கட்சியினர்

மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், விலைவாசியைக் குறைக்காமல், வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கட்டுப் படுத்தாமல் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கடைப் பிடிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், பாஜக ஆட்சியை விட்டு வெளியேறக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாடு தழுவிய மறியல் போராட்டத்தை 3 நாட்கள் நடத்துகின்றனர்.
இதன் முதல் நாளான செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக நகர்மன்ற வளாகத்தில் இருந்து அக்கட்சியினர் ஊர்வலமாக நடந்து வந்தனர்.
தட்டு வண்டியில் ஒருவர் படுத்திருக்க, எரிவாயு உருளையை அவர் மீது வைத்துக் கொண்டு அந்த வண்டியை இழுத்து வந்தனர்.
இந்தப் போராட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் த. செங்கோடன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் என்.ஆர். ஜீவானந்தம், ஒன்றியச் செயலர் ஏ. ரெங்கராஜ், ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலர் ப. ஜீவானந்தம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் கே. ராஜேந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற 21 பெண்கள் உள்பட 65 பேரை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுதலை செய்தனர்.
இன்றும் நாளையும் தொடரும் போராட்டம்…இதே கோரிக்கையை வலியுறுத்தி புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் ஆலங்குடி, அறந்தாங்கி, மணமேல்குடி, கந்தர்வகோட்டை, விராலிமலை, பொன்னமராவதி, திருமயம், அரிமளம் உள்ளிட்ட 13 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top