புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் போக்குவரத்து காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டுமென கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி ஆகிய நகரங்க ளைத் தாண்டி பொன்னமராவதி, ஆலங்குடி ஆகிய பேரூராட்சிகளில் போக்குவரத்து காவல்துறை அலுவலகம் உள்ளது. கூடுதலான போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பேரூராட்சியாக கீரனூர் உள்ளது.
புதுக்கோட்டை மார்க்கமாக சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் கீரனூர் வழியாகத்தான் சென்று வருகின்றன. அதேபோல திருச்சி மார்க்கமாக காரைக்குடி, ராமேஸ்வரம், பரமக்குடி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்களும் கீரனூர் வழியாகத்தான் செல்கின்றன.
மேலும், கீரனூரை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து வர்த்தகம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மையமாகவும் கீரனூர் உள்ளது. இதனால், கீரனூரில் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி ஸ்தம்பிக்கும் நிலை உள்ளது.
எனவே, கீரனூரில் வட்டாரப் போக்குவரத்து நிலையத்தை உருவாக்கி, போதுமாக போக்குவரத்துக் காவலர்களை நியமித்து சாலைப் போக்குவரத்தை சீரமைக்க வலியுறுத்து கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.