காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூபாய் ஒன்பதாயிரம் வழங்க வேண்டும். அரசு காலி பணியிடங் களில் சத்துணவு ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மையத்தின் சார்பாக ஐந்தாவது பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட மையத்தின் சார்பாக ஐந்தாவது மாவட்ட பேரவை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் அன்பு தலைமையில் நடைபெற்றது.
இந்த பேரவை கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மலர்விழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இதில், 36 ஆண்டுகளாக நிரந்தரமாக செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்,
ஓய்வூதியம் என்ற பெயரால் ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது. ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் 9000 வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடையாக அமைப்பாளருக்கு 5 லட்சமும்,
சமையல் உதவியாளர்களுக்கு 3 லட்சமும் உயர்த்தி வழங்கிட வேண்டும், சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே ஒட்டுமொத்த தொகை, சிறப்பு சேமநல நிதி, வருங்கால வைப்பு நிதி ஆகியவைகளை ஓய்வு பெறும் நாளிலே வழங்கப் பட வேண்டும்.
அரசு காலிப்பணியிடங்களில் சத்துணவு ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.