திருமயம் அருகே குண்டும் குழியுமான கிராம சாலையை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே திருமயம் – திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மலைக்குடிப்பட்டி கிராமத்திலிருந்து பிரிந்து பரளி கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.
பரளி கிராமத்தில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராம மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சாலை புதுப்பித்து பல ஆண்டுகளைக் கடந்த நிலையில் சாலை தொடர் பராமரிப்பு இல்லாததால் சம்பந்தப்பட்ட சாலையின் பெரும் பகுதி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
மேலும் சாலையில் உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் பரவி கிடப்பதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் சாலையைக் கடக்க பெரும் சிரமப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரளி கிராம மக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.