திருமயம் அருகே உள்ள குருந்தம்பாறை சாலையில் கன்னிப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கிரஷர் குவாரியிலிருந்து அதிக அளவு எடையுடன் டாரஸ் மற்றும் டிப்பர் என தினசரி 500க்கும் மேற்பட்ட லாரிகள் செல்வதால் ஓராண்டுக்கு முன்பு அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சாலை சேதம் அடைந்து வருவதாகவும் கூறி சம்பந்தப்பட்ட கிரஷர் குவாரிக்கு சென்ற 50க்கும் மேற்பட்ட டிப்பர் டாரஸ் லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கன்னிப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கிரஷர் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் எடுக்கப்படும் உடை கற்கள் மற்றும் கிரசரில் உள்ள ஜல்லி மற்றும் எம் சாண்ட் உள்ளிட்டவைகளை தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட லாரிகளில் குருந்தம்பாறை வழியாக கொண்டு செல்வதால் சாலை சேதம் அடைவதாக கூறி குருந்தம்பாறை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அந்த குவாரிக்கு சென்ற 50 -க்கும் மேற்பட்ட டாரஸ் மற்றும் டிப்பர் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக சாலையில் இருபுறமும் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை லாரிகள் வரிசையாக அணிவகுத்து நின்றது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கிரஷர் குவாரியிலிருந்து உடைக்கற்கள் மற்றும் ஜல்லி எம்.சாண்ட உள்ளிட்டவர்களை கொண்டு செல்வதற்காக கன்னிப்பட்டி முதல் திருமயம் வரை உள்ள சாலையும் கன்னிப்பட்டி முதல் ஆதனூர் வரை உள்ள சாலையையும் பயன்படுத்துவதாக அரசிடம் கூறி அனுமதி பெற்று விட்டு அரசிடம் அனுமதிக்கப்பட்ட சாலை வழியாக கொண்டு செல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்தப்படும் குருந்தம்பாறை சாலை வழியாக செல்வதால் கடந்த ஆண்டு நபார்டு திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட சாலை முற்றிலும் சேதம் அடைந்து விட்டதாகவும் மேலும் அதிக அளவு கொண்ட உடை கற்களை ஏற்றி செல்வதால் அதிர்வு ஏற்படுவதாகவும் மேலும் மிக வேகமாக இந்த சாலையில் லாரிகள் செல்வதால் உருவாகும் புழுதி மண்டலத்தால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் அதி வேகத்தில் லாரிகள் செல்வதால் சாலையில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் செல்வதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்துள்ளதால் மீண்டும் புதிய சாலை அமைக்க வேண்டும் என அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்த போது அதற்கு அதிகாரிகள் இந்த சாலை ஐந்து ஆண்டு பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டதாகவும் ஒரு ஆண்டு சேதமடைந்ததால் மீண்டும் உடனே சாலை அமைக்க முடியாது எனவும் ஒரு சாலை அமைத்தால் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தான் மறு சாலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்ததாகவும் இதனால் சாலை வசதி இல்லாமல் தாங்கள் மிகுந்த சிரமப்படுவதாகவும் கிரஷர் குவாரி அமைக்கும் போது அரசிடம் அனுமதி வாங்கிய வழித்தடத்தின் வழியாக மட்டுமே கிரஷர் குவாரிக்கு லாரிகள் செல்ல வேண்டும் எனவும் கிராம மக்கள் சாலையின் வழியாக லாரிகள் மற்றும் டாரஸ் லாரிகள் செல்லக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் திருமயம் வட்டாட்சியர் புவியரசன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் எழுத்துப்பூர்வமாக கிராம மக்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து அங்கு நிறுத்தப்பட்ட 50க்கும் மேற்பட்ட லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டுச்சென்றன.