Close
அக்டோபர் 1, 2024 5:39 மணி

விவசாயிகளுக்கு டிஏபி அடி உரம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு துரை.வைகோ எம்பி கோரிக்கை

தமிழ்நாடு

மதிமுக எம்பி துரைவைகோ

விவசாயிகளுக்கு டி.ஏ.பி. அடி உரத்தை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு மதிமுக முதன்மை செயலர் துரை வைகோ எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பருவமழை பெய்துள்ளதால், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மக்காசோளம், உளுந்து, பாசிப் பயிர் உள்ளிட்ட வற்றை பயிரிட்டு உள்ளார்கள். அதற்கு அடி உரமாக டி.ஏ.பி. தேவைப்படுகிறது.

விவசாயிகள் தனியார் கடைகளில் டி.ஏ.பி. உரம் வாங்கச் சென்றால், அதனுடன் வேறு ஏதாவது உரத்தையும் சேர்த்து வாங்கச் சொல்கிறார்கள். இது தொடர்பாக  கடைகளில் விவசாயிகள் முறையிட்டபோது, எங்களுக்கு உரம் வழங்கும் நிறுவனங்கள், ஒரு உரத்தை வாங்கும்போது மற்றொரு உரத்தையும் சேர்த்துத்தான் விற்க வேண்டும் என்று எங்களிடம் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் இப்படி விற்க வேண்டிய நிலை இருக்கிறது என்கிறார்கள்.

விவசாயிகளின் இப்புகார் குறித்து தூத்துக்குடி மாவட்ட விவசாய இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்கள்.

இது போன்ற நிலை தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. எனவே, விவசாயிகளுக்கு பயிர்களின் அடி உரமான டி.ஏ.பி. தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்குவதற்கு தமிழக முதலமைச்சர்  நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் துரை வைகோ எம்பி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top