களக்காட்டூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்கம் மையம் திறப்பு விழா எப்போது ? என விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக ஒவ்வொரு வட்டாரத்திலும் துணை வேளாண்மை விரிவாக்கம் மையம் அமைக்கப்பட்டு அப்பகுதி விவசாயிகளுக்கு தேவையான உரம் , விதை மற்றும் விவசாய ஆலோசனைகளை தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் சிறு காவேரிப்பாக்கம் வட்டாரம் சார்பில் காஞ்சிபுரம் அடுத்த களக்காடு பகுதியில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட்டு வந்த நிலையில் அந்த கட்டிடம் பழமையான கட்டிடம் மற்றும் போதிய இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அங்கு பணிபுரிந்த மாற்றுத்திறனாளி அலுவலர் ஒருவர் கழிவறை இல்லாததால் அருகில் உள்ள வீட்டிற்கு சென்றபோது அங்கிருந்த கால்வாயில் விழுந்து இயற்கை எய்தினார்.
இச்சம்பவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த பழைய கட்டிடத்தை நிறுத்திவிட்டு புதிய கட்டிடம் பகுதியில் கட்ட வேளாண்மை துறை சார்பில் சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய வேளாண் விரிவாக்க மையம் அமைக்கும் பணி தொடங்கியது.
இதில் 110 மெட்ரிக் டன் இருப்பு வைக்கும் அளவிற்கு உரிய இட வசதியுடன் பணிகள் நிறைவுற்று தற்போது திறப்பு விழாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறது. இந்த விரிவாக்க மையம் திறக்கப்படாததால் இப்பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் விதைகள் மற்றும் உரங்கள் இல்லாத விவசாய ஆலோசனைக்காக காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால் விவசாய பணிகளும் தடைபடுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.