Close
செப்டம்பர் 20, 2024 1:37 காலை

நீட்தேர்வு: அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 % ஒதுக்கீட்டை 15% அதிகரிக்க கோரிக்கை

முதல்வருக்கு கோரிக்கை

சிகரம் சதிஷ்குமார்

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 7.5% லிருந்து, 15%  உயர்த்த வேண்டுமென கல்வியாளர்கள் சங்கமம் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கல்வியாளர்கள் சங்கமம் நிறுவனர்  சிகரம்சதிஷ்குமார் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்துசெய்வோம் என்னும் வாக்குறுதியோடு தேர்தலை சந்தித்து, தேர்தலில் பெருவெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் ஏறிய சில நாட்களிலேயே நீட் தேர்வு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன்  தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு அரசு சார்பில் தாங்கள் நியமித்தீர்கள்.

ஆனாலும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உடனடியாக இல்லாத நிலை யில் தற்போது தேர்வும் நாடெங்கிலும் நடத்தி முடிக்கப்பட்டு, இன்றைக்கு தேர்வு முடிவுகளும் இன்றைக்கு மருத்துவக்கல்லூரியை நோக்கி மாணவர்கள் நடைபோடத் தொடங்கி விட்டனர்.

தற்போது தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர் களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் 541 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்கு தேர்வு பெற்றுள்ளனர். இது அரசுப்பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்கும், வரும்நாட்களில் மருத்து வத்துறையில் சேவை உள்ளத்துடன் பணியாற்றும் மருத்துவர்களைப் பெறுவதற்கான வாய்ப்பாகவும் கொண்டாடி மகிழ வேண்டும்.

வரும் கல்வி ஆண்டு முதல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் கடந்த அரசு வழங்கிய 7.5% இடஒதுக்கீட்டை தற்போது
15% ஆக அதிகரித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட வேண்டுமென்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இது ஒன்றே பல்லாண்டுகளாக நீட்டுக்காக மட்டுமே படித்துக்கொண்டு, பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் மாணவர்களோடும்,
நல்ல வசதி படைத்து, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களோடும் போட்டியிடும் அரசுப்பள்ளி மாணவர்களைக் காக்கும்.

மத்திய அரசிடம் தலையாட்டிக் கொண்டிருந்த கடந்தகால அரசே 7.5% இடஒதுக்கீட்டைஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கியபொழுது,
தலைநிமிர்ந்து நிற்கும் தங்களுடைய அரசு 15%இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்

நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் சட்டப் போராட்டம் ஒருபுறம் இருந்தாலும், அதுவரை 85% இடங்களை விட்டுக்கொடுத்த நாம், 15% இடங்க ளையாவது சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் தமிழ்நாடு அரசு அரசுப்பள்ளி மாணவர்களுக்குவரும் கல்வி ஆண்டு முதல் அறிவிக்க வேண்டும் என்பதனை இந்த நேரத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் சார்பில் கோரிக்கையாகப் பணிவுடன் வைக்கின்றோம்.

தேசிய அளவில் நடைபெறும் ஒரு தேர்வு தமிழ்நாட்டிற்கு கூடாது என்பதாக இல்லாமல்,
அவை மாநிலத்தின் உரிமையைப் பாதிக்கக் கூடாது என்னும் நிலையில் நம் மாநில அரசு இந்த விசயத்தைக் கையாள்வதே சரியாக இருக்கும் என்பதே சரியான நிலைப்பாடாக அமையும்.

பிப்.8 -இல் நடைபெறவுள்ள சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் எனப் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top