சேலம் முதல் உளுந்தூர்பேட்டை வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையை (NH-79) முழுமையாக நான்கு வழி சாலையாக அமைக்க வேண்டும் என்றும், திருச்சியில் இருந்து திண்டிவனம் செல்லக்கூடிய நான்கு வழி சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம், நாமக்கல் மக்களவை உறுப்பினர் ஏ,கே.பி.சின்ராஜ் கோரிக்கை வைத்தார்.
இது தொடர்பாக அவர் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
சேலம் முதல் உளுந்தூர்பேட்டை வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை (NH-79) சென்னை நகருடன் இணைக்கும் முக்கிய பிரதான சாலையாகும். இச்சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிந்த நிலையில் இன்னும் முழுமையாகப் பணி முடியவில்லை.
இந்த சாலையில் ஆத்தூர், கள்ளக்குறிச்சி உட்பட 8 நகரங்களின் புறவழிச்சாலைகள், இன்றும் இருவழிச்சாலைகளாகவே உள்ளன. குறிப்பாக சில தூரம் நான்குவழிச்சாலை, திடீரென இரண்டு வழிச்சாலை, மீண்டும் நான்குவழிச்சாலை என மாறி மாறி அமைந்துள்ளன.
இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக வருபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேலம் முதல் உளுந்தூர்பேட்டை வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையை (NH-79) முழுமையாக நான்கு வழி சாலையாக அமைக்க வேண்டும் என தனது மனுவில் வலியுறுத்தினார்.
இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உடனடியாக சென்னையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறையின் மண்டல அதிகாரியை தொடர்புக் கொண்டு உடனடியாக சேலம் முதல் உளுந்தூர்பேட்டை வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையை (NH-79) முழுமையாக நான்கு வழி சாலையாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் திருச்சியில் இருந்து திண்டிவனம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையில் இருந்து ஆறு வழி சாலையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், அதற்கு பதிலளித்த அமைச்சர் திருச்சியில் இருந்து திண்டிவனம் செல்லக்கூடிய நான்கு வழி சாலையை ஆறு வழி சாலையாக மாற்றுவதற்கான திட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், திட்ட பணிகள் முடிவுற்றதும் உடனடியாக ஆறு வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகளை துவங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.