மழலையர் வகுப்புகளுக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென தமிழ்நாடு ஆசிரியர் சங்கமம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார் வெளியிட்ட அறிக்கை:
தமிழம் முழுவதும் இன்று மழலையர் வகுப்புகள்செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர் பொதுமாறுதல் பிப்.16 -ல் நடைபெற்ற கலந்தாய்வில் 3 ஆண்டுகளுக்கு முன்பு LKG, UKG க்கு நிர்வாக மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் தங்களது ஒன்றியத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாற்றலாகி வருவதற்கு வகை செய்யப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
கடந்த ஆட்சிக்காலத்தில் முறையான திட்டமிடல் இல்லாமல்
மழலையர் வகுப்புகளைத் தொடங்குகிறோம் என்னும் பெயரில் அங்கன்வாடிகளையும், பல இடங்களில் மழலையர் வகுப்புகளில் பள்ளிகளிலும் ஏற்படுத்தி தோராயமாக 3000 ஆசிரியர்கள் பணி இறக்கம் செய்யப்பட்டதைப் போல, கட்டாய மாற்றுப் பணியில் நியமிக்கப்பட்டனர்.
அவர்களுக்கான கலந்தாய்வு தற்போது நடைபெறுகிறது.
ஆனால், அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் LKG,UKG வகுப்புகளில் இலட்சக்கணக்கான குழந்தைகள் இப்போது பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தனியார் பள்ளிகளுக்குச் செல்லாமல் அரசுப் பள்ளிகளுக்கு வந்திருப்பவர்கள்.
அங்கிருந்து பணிமாற்றம் பெற்று இவர்கள் தங்களுக்குரிய பணியிடங்களுக்கு திரும்பும் பொழுது, அங்கு ஆசிரியர் அற்ற சூழல் ஏற்படும். இதனைச் சரி செய்ய கீழ்கண்ட வழிகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றினால் நன்மை பயக்கும்.
1. பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர் பயிற்சி முடித்து, தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற சிறப்பு ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் உடனடியாக அங்கு நியமிப்பது..
2. இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களில் தேவையான தகுதி உள்ள நபர்களை தற்காலிகமாக இதற்கு மாற்றம் செய்வது.
3. சமூக நலத்துறையின் கீழ் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கிட வழிவகை செய்வது போன்ற யோசனைகளில் ஏதேனும் ஒன்றை அரசு கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையேல், LKG, UKG மையங்களில் மாநிலம் முழுவதும் குழப்பம் ஏற்படக் கூடிய சூழல் ஏற்படும். இது கடந்தகால ஆட்சியின் திட்டமிடல் இன்மையால் ஏற்பட்டுள்ள பெரும் கோளாறு. இந்தக் கோளாறுகளைக் களைய முதலுதவி போன்றதே மேற்கண்ட வழிமுறைகள். நிரந்தரத் தீர்வை வரும் கல்வி ஆண்டுத் தொடக்கத்திற்குள் எடுத்திட வேண்டியதும் அவசியம்.