Close
செப்டம்பர் 20, 2024 1:26 காலை

மழை நீர் கால்வாயில் சாக்கடை நீர் கலப்பதால் மாசடையும் பிள்ளையார் குளம் காப்பாற்றப்படுமா ?

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பிள்ளையார்குளம் செல்லும் மழைநீர் வடிகால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்

புதுக்கோட்டை நகராட்சி வடக்கு 2 , 3 மற்றும் 4 வீதிகளில் உள்ள மழைநீர் கால்வாயில் கழிவு நீர் கலந்து பிள்ளையார் குளம் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி மற்றும் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் அமைப்பை முன் மாதிரியாக  வைத்து நகரின் நடுவில் அமைந்திருந்த அரண்மனையை மையமாகக் கொண்டு நான்கு திசைகளிலும் தலா 4 அடுக்கு முறையில் மொத்தம் 16 வீதிகள் அமைக்கப்பட்டன.(தற்போது 28 வீதிகளாக விரிவடைந்துள்ளது)

மழை நீரை குடிப்பதற்கும் விவசாயத்தும் சேமிக்கும் வகையில் மேட்டுபகுதியான மச்சுவாடியில் தொடங்கி காட்டுப்புதுக்குளம் (புதிய பேருந்து நிலையம்) வரை ஏறத்தாழ 36 குளங்களும் ஒன்றின் வடிகால் நீர் மற்றொரு குளத்துக்குச் சென்று வரிசையாக நிரம்பும் வகையில் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. மேலும், மழைநீர் கால்வாய்கள் குடியிருப்புகளின் முன் பகுதியிலும், கழிவு நீர் கால்வாய்கள் பின்புறமும் அமைக்கப்பட்டன. இதன் காரணமாக எவ்வளவு அதிகமான மழை பெய்தாலும் சாலைகளிலோ தெருக்களிலோ நீர் தேங்குவதில்லை. புதுக்கோட்டை நகராட்சிப்பகுதியில் தற்போது சுமார் 1.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகை பெருக்கத்தால் புதிய விரிவாக்கப் பகுதிகள் உருவாயின. நகரிலிருந்து வெளியேறும் கழிவுகள் தேங்கி தொற்று நோயைப் பரப்பும் சூழல் அதிகரித்தது.

இதைத்தவிர்க்க புதை சாக்கடைத்திட்டமும் சுமார் 42 கோடியில் கொண்டு வரப்பட்டது. எனினும் நகரில் நிலத்தடி நீர் மட்டத்துக்கு உதவக்கூடிய வகையில்  மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட சுமார் 40 குளங்கில் தற்போது 30 குளங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இவற்றில் சேரக்கூடிய மழை நீர்தான் நிலத்தடி நீர் மட்டத்தை காத்து வருகின்றன.

ஆனால், தற்போது மழை நீர் வடிகால்வாய்களில் கழிவு நீர் கலப்பதால் நீர் சேரும் குளங்கள் கழிவு நீர்க்குட்டைகளாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக வடக்கு 2 மற்றும் வடக்கு 3, 4  ஆகிய வீதிகளில் இருந்து மழை நீர் செல்லும் முக்கிய கால்வாயில்(படம்) கழிவு நீர் கலப்பதால்,  மழை நீர் சேரும் பிள்ளையார்குளம் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, புதிய நகராட்சி நிர்வாகம் இதை  கவனித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top