Close
நவம்பர் 21, 2024 7:01 மணி

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதாக புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் ஆட்சியரிடம் புகார்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நாட்டுப்படகு மீனவர் சங்கத்தினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தொழில் செய்து வரும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டுப்படகு மீனவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர் மேலும் மாவட்டத்தில் உள்ள 32 மீனவ கிராமங்களிலும் ஆயிரக்கணக்கான நாட்டுப்படகு மீனவர்களும்  மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்

இந்நிலையில் விசைப்படகு மீனவர்கள் ஐந்து நாட்டிக்கல் மைல் அப்பால் தான் மீன் பிடிக்க வேண்டும் என்று விதி மேலும் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தக் கூடாது என்ற தடையும் உள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விசைப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி இரண்டு நாட்டிக்கல் மைல் தூரத்திலேயே மீன் பிடிப்பதால் நாட்டுப்படகு மீனவர்களுக்கு மீன்கள் கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக  மீன்வளத்துறை அதிகாரிகளிடம்  நாட்டுப்படகு மீனவர்கள் பல முறை புகார் அளித்தும்அதிகாரிகள் விசைப்படகு மீனவர்கள் மீது  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த நாட்டுப்படகு மீனவர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமுவை  சந்தித்து புதுக்கோட்டை கடற்கரை கிராமங்களில் விசைப்படகு மீனவர்களுக்கு நாட்டுப்படகு மீனவர்களுக்கு உள்ள பிரச்னை குறித்தும் விசைப்படகு மீனவர்களால்  நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது  குறித்தும் எடுத்துக் கூறியதோடு அத்துமீறலில் ஈடுபட்டு வரும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

இப்பிரச்னையில் மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அனைத்து நாட்டு படகு மீனவர்கள் ஒன்றிணைத்து கிழக்கு கடற்கரை சாலையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும்  நாட்டுப்படகு மீனவர் சங்கத்தினர்  தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top