Close
நவம்பர் 10, 2024 7:23 காலை

பணி நிரந்தரம்- காலமுறை ஊதியம்: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி(மார்ச்14) சென்னையில் பெருந்திரள்முறையீடு

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட ஏஐடியூசி கூட்ட அரங்கத்தில்  நடைபெற்ற வழியனுப்பு நிகழ்ச்சி

பணி நிரந்தரம்- காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளில் தீர்வு காண வலியுறுத்தி நாளை திங்கட்கிழமை சென்னையில் நடைபெறும் பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க நூறு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் இரண்டு பேருந்துகளில் ஞாயிற்றுக்கிழமை  இரவு புறப்பட்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலமுறை ஊதிய நிரந்தர பணியிடங்களில் தினக்கூலி அடிப்படையில் அரசு விதிகளின்படி பணி நியமனம் செய்யப்பட்டு கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கிட வலியுறுத்தி அளிக்க பட்ட கோரிக்கையில் அமைச்சரும், முதன்மை செயலாளரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் கோரிக்கை நூறு சதவீதம் நியாயமானது விரைவில் பணி நியமனம் ஆணை வெளியிடப் படும் என்று உறுதி அளித்தார்கள்.

ஆனால் இதுநாள் வரை அவர்கள் அளித்த உறுதிமொழிப்படி எந்தவித நடவடிக்கையும் இல்லை. உடனடியாக பணி நிரந்தரம் , காலமுறை ஊதியம் வழங்கிடவும், நூறு சதவீதம் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற அமைச்சர் உறுதிமொழியை நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்தி  (14.03.2022 ) திங்கட்கிழமை சென்னை சுகாதார இயக்குனர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு  ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக, தஞ்சை மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் பி.சுந்தரலிங்கம், மாவட்டச் செயலாளர் எஸ்.புருஷோத்தமன், மாவட்ட பொருளாளர் ஜி.கார்த்திக் ஆகியோர் தலைமையில் நூறு பேர்  இரண்டு பேருந்துகளில் தஞ்சையில் இருந்து சென்னை புறப்பட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்க செல்லும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்க நிர்வாகிகளை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட ஏஐடியூசி கூட்ட அரங்கத்தில்  நடைபெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் ஜி.கார்த்தி, ஒருங்கிணைப்பாளர் டி.சச்சிதானந்தம்,செய்தி தொடர்பாளர் எம்.வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம் தலைமையில் ஏஐடியூசி மாநில செயலாளர் சி.சந்திரகுமார் சங்க பொருளாளர் ஜி.கார்த்திக் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

 நிகழ்வில் நுகர்பொருள் சங்க மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன், அரசு போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் துரை. மதிவாணன், கட்டுமான சங்க மாவட்ட பொருளாளர், பி. செல்வம், சுமை சங்க நிர்வாகிகள்பாலையன், தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top