இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை சார்பாக ராஜஸ்தானில் டாக்டர் அர்ச்சனா சர்மா இறப்பிற்கு தகுந்த நீதி வேண்டி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் (2.4.2022) நடத்தப்பட்டது.
இந்திய மருத்துவ சங்க புதுக்கோட்டை கிளை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு புதுக்கோட்டை கிளை தலைவர் டாக்டர் சுவாமிநாதன் தலைமை வகித்து பேசியதாவது:
மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர் அர்ச்சனா மீது தவறான வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
நீண்டகால கோரிக்கையான மருத்துவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க மத்திய அரசின் சட்டம் கொண்டு வர வேண்டும்.
மருத்துவர்களை குற்றவாளியாக பதிவு செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளில் மாற்றம் செய்ய வேண்டும்.நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் அதிக இழப்பீடு கேட்கும் வழக்குகளிலிருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்களின் தீர்ப்பு (எண் 3541/2002 ) ஆணையின் படி எந்த ஒரு வழக்கு விசாரணை வரும் பொழுதும், காவல்துறை நேரடியாக விசாரணை செய்யவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ கூடாது. மருத்துவ துறை சார்ந்த நிபுணர்களின் அறிவுறுத்தலின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மூத்த மகப்பேறு மருத்துவர் ஜானகி ரவிக்குமார் கூறியதாவது: இனிவரும் காலங்களில் இது போன்ற தொடர் சம்பவங்கள் நடக்கும் பட்சத்தில் மகப்பேறு மருத்துவம் சார்ந்த படிப்பினை எடுத்து படித்து மக்களுக்கு சேவை செய்ய மருத்துவர்கள் எவரும் முன்வர மாட்டார்கள் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய சங்கம் மருத்துவ உறுப்பினர்கள் மரு.கோபாலகிருஷ்ணன், மரு.சாரதாமணி, மரு.ஜெயலட்சுமி, மரு.திலகவதி, மரு.சுப்பையா, மரு.சுகன்யா, மரு.நவரத்தினசாமி, மரு.பெரியசாமி, மரு.ராஜா, மரு.சரவணன், மரு.சுப்பையா, மரு.ரவிக்குமார், மரு.தர்மபாலன், மரு.ஜெய்சிங், மரு.செந்தில்அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிறைவாக முன்னாள் தலைவர் டாக்டர் சலீம் நன்றி கூறினார்.