Close
நவம்பர் 22, 2024 1:33 காலை

தமிழை வீழ்த்தும் நடைமுறைக்கு முடிவு கட்ட தமிழக அரசு முன் வரவேண்டும்: கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை

புதுக்கோட்டை

தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கம் நிறுவனர் சதிஷ்குமார் கோரிக்கை

தமிழை வீழ்த்தும் நடைமுறைக்கு முடிவு கட்ட தமிழக அரசு முன் வரவேண்டுமென கல்வியாளர்கள் சங்கமம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி தொடங்குகின்றேன் என்னும் பெயரில் தாய்மொழியைப் பலிகொடுக்கும் பணியைக் கடந்த ஆட்சியில் தொடங்கி னார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நடைபெறும் ஆட்சி என பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தற்போதைய ஆட்சியிலும் இன்னும் அது தொடர்கிறது என்பதை நாம் நினைவூட்ட விரும்புகின்றேன்.

தமிழை தாய்மொழியாகக் கொண்ட தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வியை மாணவர் சேர்க்கையைக் காரணம்காட்டி ஊக்குவித்தால், தமிழ் எங்கிருந்து வளரும். ஆங்கிலம் படித்தால்தான் அறிவு வளரும் என்பது அடிமுட்டாள்தனம்.

தாய்மொழியில் மட்டுமே சிந்திக்க முடியும் உணர்வுகளை வெளிக்காட்ட முடியும். தொடக்கக் கல்வியை முற்றிலும் தாய்மொழியாக்க வேண்டிய நிலையில் இருக்கும் நாம்,  இன்னமும் ஆங்கில வழிக் கல்வியைக் காட்டி, அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

அரசுப் பள்ளிகளில் தமிழைப் புறக்கணித்து, ஆங்கிலத்திற்கு
சிவப்புக் கம்பளம் விரிப்பதென்பது.அம்மாக்களை ஆதவற்றோர் இல்லங்களில் விட்டுவிட்டு, அன்னை இல்லம் என்ற பெயரில் வீடுகட்டுவதற்கு ஒப்பானதாகும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில்தமிழ்மொழிக் கல்வியே நடைபெறாத பள்ளிகள் என்பனவற்றின் எண்ணிக்கை 100 க்கும் பக்கத்தில் நிற்கின்றன என்பது
தமிழுக்கும் பெருமை இல்லை. தமிழ்நாட்டுக்கும் பெருமை இல்லை.

ஆங்கில வழியில் பள்ளிக்கூடங்களை நடத்த வேண்டும் என
அரசு விரும்பினால், தனி வளாகம் தனி ஆசிரியர்கள் என
ஒன்றியத்திற்கு ஒரு பள்ளியைக் கொண்டுவர திட்டமிடலாம்.
அல்லது மொழிப்பாடமாகக் கற்பித்தல் நிகழ்வதை இன்னும் கண்காணித்து வலுவூட்டலாம்.  Spoken English என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கலாம்.

அதையெல்லாம் விடுத்து, ஆங்கிலம் கொண்டு தமிழை வீழ்த்தும் நடைமுறைக்கு முடிவுகட்டுங்கள். ஆங்கிலம் என்பது அறிவல்ல. அது ஒரு மொழி. வெள்ளை என்பது அழகல்ல.அது ஒரு நிறம்.

தமிழ்நாட்டிலும் ஆங்கிலம் படித்தால்தான் பிழைக்க முடியும் என்பதை விடவும் தலைக்குனிவு தமிழ்நாட்டிற்கு வேறெதும்
நேர்ந்து விடப்போவதில்லை.

இந்தியை எதிர்ப்பதற்கு முன்..ஆங்கிலத் திணிப்பைத் தவிருங்கள்.. தமிழும் வளரும் தமிழனும் வளர்வான் என தமிழ்ப்புத்தாண்டில் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top