Close
நவம்பர் 22, 2024 5:36 மணி

திருச்சி கள்ளிக்குடி காய்கனி வணிக வளாகத்தை, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்: வைகோ

மதிமுக

மதிமுக பொதுச்செயலர் வைகோ

திருச்சி கள்ளிக்குடி காய்கனி வணிக வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென  மதிமுக பொதுச்செயலர் வைகோ  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், கள்ளிக்குடியில் புதிதாகக் கட்டப்பட்டு உள்ள காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்களுக்கான மத்திய வணிக வளாகத்தை, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கின்றேன்.

திருச்சி மாநகருக்கு உள்ளே நிலவும் கடுமையான போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்ப்பதற்காகவும், எதிர்காலத்தில் மாநகரின் வளர்ச்சிக்காகவும், திருச்சி – சென்னை நான்கு வழிச்சாலையில், மணிகண்டம் அருகில் 9.79 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்து, ஒருங்கிணைந்த மத்திய வணிக வளாகம் கட்டுவதற்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால்  30.06.2014 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானப் பணிகளுக்கு மட்டும் ரூ.65 கோடி நிதி ஒதுக்கி, தரைத்தளம் 330 எண்கள், முதல் தளம் 500 எண்கள் என மொத்தம் 830 கடைகள் கட்டி முடிக்கப்பட்டன.

அதன்பிறகு, நகரின் மையப்பகுதியில் கடுமையான இட நெருக்கடியில் இயங்கி வருகின்ற காந்தி மார்க்கெட் வணிகர்களை, கள்ளிக்குடி வணிக வளாகத்திற்கு மாற்ற முடிவு செய்தபோது, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். எங்களைக் கலந்து பேசாமல், திருச்சி மாநகரத்தை விட்டு விலகி வெகு தொலைவில் கட்டிய வணிக வளாகத்திற்குச் சென்று நாங்கள் வணிகம் செய்ய இயலாது எனக்கூறி, போராட்டங்கள் நடத்தினார்கள்; நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தார்கள்.

ஆனால், திட்டம் வகுத்தபடி கட்டி முடித்த வணிக வளாகத்தை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  05.09.2017 அன்று காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். 2018 ஆம் ஆண்டு, காந்தி மார்க்கெட் வணிகர்களுக்கு 288 கடைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அவர்கள் அங்கே வராததால், அந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. பின்னர், 2020 ஜூலை மாதம், வணிகர்களுக்கு 163 கடைகள், விவசாயிகளுக்கு 74 கடைகள் என 237 கடைகள் ஒதுக்கப்பட்டன.

ஆனால், அரசின் முறையான அறிவிப்போ அல்லது வணிக வளாகத்திற்குச் சென்று வருவதற்கான பேருந்து வசதிகளோ செய்து தரப்படவில்லை என்பதால், அங்கே கடை வாடகைக்கு எடுத்தவர்களும் வணிகம் செய்ய முடியாமல் தடுமாறினார்கள். விற்பனை இல்லாமல், ஒரு சில மாதங்கள் வாடகை தந்தனர். அதன்பின்னர், அவர்களும் கடைகளைப் பூட்டி விட்டனர்.

தற்சமயம் இடமதிப்புடன் சேர்த்து ரூ.77 கோடி ரூபாய் அரசு செலவழித்து, உயர் தரமான கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில், கள்ளிக்குடி மத்திய வணிக வளாகம் செயல்படாமல் இருப்பது, மக்களிடையே வருத்தத்தை அளிக்கின்றது. திருச்சி மாநகரத்திற்கு உள்ளே நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி பெருகி வருகின்றது.

இதுதொடர்பாக, மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ  வாயிலாக, மறுமலர்ச்சி திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் எம்.தங்கவேலு ஆகியோருடன் விவசாயப் பிரதிநிதிகள் என்னை நேரில் வந்து சந்தித்து முறையிட்டனர்.

அண்மையில், பத்திரிக்கையாளகளிடம் பேசிய, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஒரு மாற்றுத் திட்டத்துடன் கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தை செயல்படுத்திட முயற்சிப்போம் எனக் கூறி உள்ளார்.

சென்னையில் பாரி முனையில் இருந்த பேருந்து நிலையம், அதற்கு எதிரே கொத்தவால் சாவடி காய்கறி ஒட்டுமொத்த விற்பனை மையங்களை, ஊருக்கு வெளியே வெகு தொலைவில் கோயம்பேட்டில் கட்டுவதாகக் கூறி, கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், அந்த முடிவு மக்களுக்கு நன்மையாகவே அமைந்தது. இப்போது, புதிய பேருந்து நிலையத்தை. கிளாம்பாக்கத்தில் கட்டுகின்றார்கள்.

மதுரை மாநகரில், ஊருக்கு வெளியே வெகு தொலைவில் மாட்டுத்தாவணியில் பேருந்து நிலையம் அதற்கு அருகில் காய்கறி, மலர் வணிக வளாகம் கட்டப்பட்டபோது, கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், இன்றைக்கு அந்தப் பகுதி மிக வேகமான வளர்ச்சி பெற்று விட்டது.

திருச்சி கள்ளிக்குடி காய்கனி வணிக வளாகம், திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில்தான் உள்ளது. சரக்கு ஊர்திகள் தடை இன்றி வந்து போக முடியும்.

எனவே, கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்திற்கு புத்துயிர் ஊட்ட வேண்டும்; அரசு நிதி விரயம் ஆகாமல் தடுத்திட, பல்பொருள் வணிக வளாகம் அல்லது கோவை கொடீசியா வணிக வளாகம் போல மாற்றிட வேண்டும்; திருச்சி புதிய பேருந்து நிலையத்தையும் விரைவில் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கின்றேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top