Close
செப்டம்பர் 19, 2024 11:18 மணி

பழைய ஓய்வுதியத்திட்டத்தை முதலமைச்சர் அமல்படுத்துவார்: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நம்பிக்கை

சிவகங்கை

காளையார்கோவிலில் நடைபெற்ற ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட பொதுக்குழுக்கூட்டம்

 தமிழக முதல்வர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவார் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டம் காளையார்கோவில் தனியார் ஓட்டலில் மாவட்டத் தலைவர் மலைராஜ் தலைமையில் வட்டாரச் செயலாளர் ஆரோக்கிய பாஸ்கர் முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் பங்கேற்று பேசுகையில்,  தமிழக முதலமைச்சர் சாத்தியம் இல்லாததையும் சாத்தியமாக்குவார். நிச்சயமாக தற்போது நடைமுறையிலுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.

தொடக்க நிலை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் கொண்டுவந்ததற்கும், ஆசிரியர்களுக்கானபொது மாறுதலை 100 சதவீதம் ஒளிவு மறைவற்ற கலந்தாய்வாக நடத்தியதற்கு நன்றி தெரிவிப்பதாகவும்  குறிப்பிட்டார்.

முன்னதாக ஒய்வு பெற்ற செங்குலம் நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பொன் சாந்தாரம் பணிகளை பாராட்டி பேசினார்.

மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1) மாண்புமிகு தமிழக முதல்வர்  தொடக்க நிலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளதற்கு வரவேற்பு  தெரிவிப்பது.

2) 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ₹1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளதற்கு  பாராட்டு தெரிவிப்பது.

3. அரசு ஊழியர், ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கை யான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஒய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்

4. 100 சதவீத ஒளிவு, மறைவற்ற கலந்தாய்வை வெளிப்படையாக நடத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது.

5. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தால் போராடி பெறப்பட்ட அலகு விட்டு அலகு மாறுதலை மீண்டும் இந்தாண்டு கொண்டு வந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிப்பது.

6. நடுநிலைப் பள்ளிகளில் எந்தவித பதவி உயர்வு வாய்ப்புமின்றி பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் தி.அருள்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன், மாநில அமைப்பு செயலாளர் செ.ரமேஷ் , இராமநாதபுரம் மாவட்ட தலைவர் சோ.முருகேசன் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் எம்.ராஜாங்கம், திருச்சி மாவட்ட செயலாளர் க.உதுமான் அலிஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.ஆரோக்கிய சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் உ.சுரேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் லூ.சி.இளங்கோ, மாவட்ட துணைச் செயலர் சமயதுரை, மாவட்ட அமைப்புச் செயலாளர் மாரியப்பன், காளையார்கோவில் வட்டாரச் செயலாளர் அலெக்சாண்டர் துரை, பொருளாளர் நாகலிங்கம்.

மாவட்ட மகளிரணி தலைவி விக்னேஸ்வரி, இராமநாதபுர மாவட்ட செயலாளர் லிங்கதுரை, பொருளாளர் முஜிபூர் ரகுமான், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் எம்.விநாயகம், அமைப்பு செயலாளர் மு.முத்துக்குமார்,செய்தித் தொடர்பாளர் அ.ரகமதுல்லா உள்ளிட்ட மாநில, மாவட்ட, மற்றும் காளையார் கோவில், சாக்கோட்டை ,சிவகங்கை ,தேவகோட்டை, மானாமதுரை ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, மாவட்ட செயலாளர் ஸ்டீபன் வரவேற்றார். நிறைவாக மாவட்ட பொருளாளர் ஆர்.கண்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top