ஈரோடு மாநகரில் பல மாதங்களாக ஒதுங்க இடமில்லாமல் கோவில் வாசலில் ஊடக செய்தியாளர்கள் – தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக மற்ற மாவட்டங்களை போல பாதுகாப்பான அறை ஒதுக்கி தர வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஈரோடு தெற்கு மாவட்ட செயலகக் குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு மாவட்ட செயலகக் குழு கூட்டம் மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி.பாஷா வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் பல்வேறு மக்கள் பணிகள் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தின் தலைநகரமான ஈரோடு மாநகரில் அனைத்து செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் எதிரே அமைந்துள்ள பழைய கட்டுப்பாட்டு அறையில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு அங்கிருந்து தங்கள் பணியினை மேற்கொண்டு வந்தனர்.
கடந்த ஆண்டில் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள கோவில் வாசலில் அமர்ந்தபடி தங்களுடைய பணிகளை மேற்கொண்டு, வெளியே சென்று செய்திகளை சேகரித்து மீண்டும் திரும்பி கோவில் வாசலில் வந்து அமர்ந்து தங்களுடைய பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
கடந்த இரண்டு மாத காலமாக கடுமையான வெயிலிலும் தற்போது அடிக்கடி பெய்து வரும் கன மலையிலும் ஒதுங்க கூட இடமில்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் தங்களுடைய உயிரையும் துச்சமென மதித்து செயலாற்றிய முன்களப்பணியாளர்களில் செய்தியாளர்களும் முக்கியமா னவர்கள்.
அப்படிப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இடம் அளிக்காமல் அலைக்கழிப்பது வருத்தத்திற்குரிய செயலாகும். ஆகவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான அறையை ஏற்படுத்தி அவருடைய பணிகள் நடைபெற வழிவகை செய்யுமாறுI கட்சியின் மாவட்ட செயலகக் குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
கூட்டத்தில் , ஈரோடு தெற்கு மாவட்ட ஊடக ஒருங்கிணைப் பாளர் அபூபக்கர் சித்திக், மாவட்ட பொருளாளர் ம.ஃபர்ஹான் அஹமது, துணைத்தலைவர் ஆட்டோ.அப்துல் ரகுமான், மாவட்ட செயலாளர் அ.சாகுல் ஹமீது, அமைப்புச்செயலாளர் ஜமால்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.