தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென
சலவைத் தொழிலாளர் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி வண்ணார் சாதிக்கு உரிய இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் பேரவையின் மாநில செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை சென்னை புதுவண்ணாரப் பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் டி.பாலு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பேரவையின் தலைவராக இருந்து மறைந்த கே.முத்துக்குமாரின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆர்.கே.நகர் சட்டப் பேரவை உறுப்பினர் ஜெ.ஜெ.எபினேசர் கலந்து கொண்டு முத்துக்குமாரின் படத்தைத் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலத் தலைவர் டி.பாலு கூறியதாவது:
சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் வண்ணார் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசு அதிகாரம் உள்ளிட்டவைகளில் உரிய வாய்ப்பு மற்றும் பங்களிப்பு அளிக்கப்படவில்லை. எனவே தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதில் வண்ணார்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.
மாநிலம் முழுவதும் சலவைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் வண்ணார் என ஒரே மாதிரியான சாதிச் சான்று வழங்கிட தமிழக அரசு உத்தரவிட வேண்டும். சென்னை புது வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள பழைமையான சலவைத் துறையை நவீனப்படுத்தி புதிய மின் மோட்டார்கள், கூடுதல் ஓய்வு அறைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.
திருவொற்றியூர் காலடிப்பேட்டையிலுள்ள சலவைத் துறையில் துணிகளை துவைத்து காய வைக்கும் இடத்தில் மாநகராட்சி நலவாழ்வு மையத்தை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்.
விறகு கரியைப் பயன்படுத்தி ஆடைகளை தேய்த்துக் கொடுக்கும் வழக்கமான தொழில்முறையால் சலவைத் தொழிலாளர்கள் உடல்நலம் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இதனை கைவிட்டு எல்.பி.ஜி. யை பயன்படுத்தி தேய்க்கும் உபகரணங்களை சலவைத் தொழிலாளர்களுக்கு அரசே இலவசமாக வழங்கிட வேண்டும். இதன் மூலம் சலவைத் தொழிலாளர்களின் நலம் காக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார் பாலு. .
இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் வீ.கவிகணேசன், பேரவையின் பொதுசெயலாளர் ஜி. எஸ். அண்ணாமலை, பொருளாளர் பி.மாசிலாமணி, மாமன்ற நிர்வாகிகள் ஏ.கே. தனபால், முனைவர் ஆர் தங்கவேல் கே.முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.